Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 15, 2024

மணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மணமான மகளின் வாழ்க்கையில் பெற்றோர்கள் செய்யும் பங்களிப்புகள் கவனிக்கப்படாமலும், கணக்கில் கொள்ளப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த கனரா வங்கி உத்தரவை எதிர்த்து, மகள் பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு பதிலளித்த கனரா வங்கி, திருமணமான பெண், தந்தையின் வருமானத்தை சாராதவராக இருந்தால் கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, திருமணமான பெண்களுக்கும் கருணை அடிப்படையில் வேலை வழங்கலாம் என்பதன் மூலம் முதல்நிலை சவாலை கடந்துவிட்டாலும், தந்தையின் வருமானத்தை சார்ந்திருந்தாரா, இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டிய மற்ற சவால்கள் தொடர்கிறது.

ஒரு ஆண் திருமணத்திற்கு பிறகு தந்தையுடன் வாழ்வது இயல்பாகிவிடும் நிலையில், மணமான பெண் தன் பெற்றோருடன் வசிக்க முடிவெடுத்துவிட்டால் அது அசாதாரணமானதாக கருதப்படுகிறது.

ஒரு பெண், தனது மருத்துவம், கல்வி உள்ளிட்ட பிறவற்றிற்காக பெற்றோரை சார்ந்து இருந்து வந்தாலும், கருணை அடிப்படையில் வேலை கேட்கும் போது பெற்றோரை சார்ந்திருப்பதை உறுதிப்படுத்துவது கடினமான பணியாகிறது.

மணமான பெண்களுக்காக பெற்றோர்கள் செய்யும் பங்களிப்புகள் கவனிக்கப்படாமலும், கணக்கில் கொள்ளப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் உள்ளது. ஒருவேளை அவற்றை வெளிப்படுத்தினால் மகளின் புகுந்த வீட்டின் கண்ணியம் குறைவானதாகக் கருதப்பட்டால் அது பிற்போக்குத்தனமானது.

இதுபோன்ற கலாச்சார ரீதியிலான சிக்கலான விவகாரங்களில் பிடிவாத அணுகுமுறை இல்லாமல், அனுதாப அணுகுமுறை அவசியம். கருணை அடிப்படையில் பணி வழங்க கோரிய பிரியாவின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து, அவரது தகுதிக்கு ஏற்ற பணிக்கான நியமன ஆணையை 6 வாரத்தில் சம்பந்தப்பட்ட வங்கி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News