Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசின் வேண்டுகோளை புறக்கணித்து, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் ஆசிரியர்களுக்கு, 'மெமோ' கொடுக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளிகளில், 2009 ஜூன் 1க்கு முன் நியமிக்கப்பட்டவர்களை போன்றே, அதற்குப்பின் நியமிக்கப்பட்ட தங்களுக்கும், அடிப்படை ஊதியம் வேண்டும் என, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சங்கமான, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சங்கம் சார்பில், கடந்த மாதம் 19ம் தேதி முதல், சென்னை உட்பட மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படுகிறது.
தேர்வு நடைபெறும் காலம் என்பதால், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்லுமாறு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஆனால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
மேலும், பெற்றோரையும் போராட்டத்துக்கு வரவழைத்து, ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்கள் மற்றும் பெற்றோரை, உள்நோக்கத்துடன் தங்கள் சுயலாபத்துக்கு திரட்டுவது, ஆசிரியர்களின் நியமன விதிகளுக்கு எதிரானது.
இதன்அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
ஆசிரியர்களின் விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால், நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, 'சஸ்பெண்ட்' செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு பாதிக்கும் அபாயம் உள்ளது' என்றனர்.
No comments:
Post a Comment