தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் வரும் வியாழக்கிழமை (11-4-24) அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
ரம்ஜான் தேதி அறிவிப்பு:
இதுகுறித்து அரசின் தலைமை ஹாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹிஜ்ரி 1445 ரமலான் மாதம் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 09-04-2024 தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 11-04-2024 தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் பித்ர் வியாழக்கிழமை 11-04-2024 தேதி கொண்டாடப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக ரம்ஜான் கருதப்படுகிறது. இதை ரமலான் பண்டிகை என்றும் குறிப்பிடுவார்கள். ரம்ஜான் மற்றும் ரமலான் பண்டிகை என்று கூறினாலும், அடுத்தவருக்கு உதவும் பண்பை வளர்க்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையை ஈகைத் திருநாள் என்றும் கூறுகின்றனர்.
நோன்பு:
இஸ்லாமியர்களின் நாட்காட்டியின்படி, அதில் வரும் 9வது மாதம் ரமலான் மாதம் ஆகும். இஸ்லாமியர்களின் 5 கடமைகள் கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜூ ஆகும். இதில் 3வது கடமையான நோன்பு ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படுகிறது.
இஸ்லாமியர்களின் முக்கிய கடமையாக ரமலான் மாதம் நோன்பிருத்தல் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நோன்பில் சூரியன் உதிப்பது முதல் சூரியன் மறையும் வரை உணவு, நீர் எடுத்துக்கொள்ளாமல் எச்சிலை கூட விழுங்காமல், தீய செயல்களில் ஈடுபடாமல் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் கடமையாக உள்ளது. உடல் மட்டுமின்றி, மனதளவிலும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே நோன்பு இருக்கப்படுகிறது.
ரமலான் மாதம் ஏன் சிறப்பு?
இந்து புராணங்களில் சொர்க்கவாசல் என்று அழைக்கப்படுவது போலவே, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் சொர்க்கவாசல் பற்றி கூறப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் என்பதை ரய்யான் என்று கூறுவார்கள். ரமலான் மாதத்தில் நல்ல குணங்களுடன் நோன்பு இருப்பவர்கள் மட்டுமே இந்த ரய்யான் வழியாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை ஆகும்.
மேலும், இந்த ரமலான் மாதமானது நரகத்தின் வாசல்கள் மூடப்பட்டு சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் என்றும், இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் என்றும், அதிகளவில் நன்மைகள் செய்ய வேண்டிய மாதம் என்றும், அல்லாஹ்வை நெருங்கும் வாய்ப்பை அதிகளவில் தரும் மாதம் என்று ரமலான் மாதத்திற்கு ஏராளமான சிறப்புகள் உண்டு.
No comments:
Post a Comment