மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
நீங்கள் கம்பீரமான தோற்றத்தை கொண்டவர்கள்.
பரந்த மனப்பான்மை உடையவர்கள். கிரகநிலை - ராசி ஸ்தானத்தில் இருந்து தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது ரண ருண ரோக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.
மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
மேஷம் ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். உங்களின் சுய முயற்சியினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். அதிக வேகமில்லாமல் நிதானமாகவும், பொறுப்புடனும் காரியமாற்றுவீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். வீண் அபவாதங்களிலிருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம், இடமாற்றம் ஆகியவை நடக்கும். உங்களின் இரக்க குணத்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். அதேநேரம் சிலருக்கு முழங்கால் வலி, மூட்டு வலி ஆகியவை ஏற்படலாம். தாயார் வழி உறவுகள் சீராகும். உங்களுக்கு எதிராக கலகம் செய்தவர்கள் அடங்குவார்கள்.
வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். முக்கியமான பூஜைகள், ஹோமங்களை இல்லத்தில் நடத்துவீர்கள். அசையாச் சொத்துகளால் வருமானம் வரத் தொடங்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். உங்களின் முகத்தில் வசீகரம் உண்டாகும். பிறரைக் கவரும் வகையில் பேச்சுத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகளைச் செய்யும் ஆற்றலைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ்பணிபுரிபவர்களுக்கு தக்க அறிவுகளை வழங்கி அவர்களை உங்களுக்கு ஆதரவாக்கிக் கொள்வீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியால் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை உணர்வு பூர்வமாக பரிசீலித்து உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபம் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளவும். கட்சி மேலிடத்திடம் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளால் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள்.
கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். அதனால் புகழைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். உங்கள் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள்.பெண்மணிகள் கணவருடன் விட்டுக்கொடுத்துப் பழகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. மாணவமணிகள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவும் நன்றாக இருக்கும். அதேநேரம் புதிய நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம்.
அஸ்வினி: இந்த குரு பெயர்ச்சியின் மூலம் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மனக்குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்தக் காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும்.
பரணி: இந்த குரு பெயர்ச்சியின் மூலம் எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்தக் குரு பெயர்ச்சியின் மூலம் பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. கணவனின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் |
சிறப்பு பரிகாரம்: அரளிப்பூவை வாங்கி மாலையாக கட்டி அருகிலிருக்கும் முருகன் கோவிலில் உள்ள வேலுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கவும் |
சொல்ல வேண்டிய மந்திரம்: 'ஓம் சரவணபவ' என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும் |
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 |
அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு |
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு |
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
No comments:
Post a Comment