Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 16, 2024

கடகம் ராசி - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 முழுமையாக

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே! நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்பவர்கள். கிரகநிலை: தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது தைரிய ஸ்தானம் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - சப்தம ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

கடகம் ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: குரு பெயர்ச்சியில் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உங்கள் சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும். உற்றார், உறவினர்கள் நண்பர்களிடம் சுமுகமான உறவு தொடரும். உடல் உபாதைகள் நீங்கும். எதிர்பாராத புதிய பொறுப்புகள் தேடி வரும். இதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் நேர்மையான நடத்தையை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களின் விவாதத் திறமை அதிகரிக்கும். முக்கியமான விவாதங்களில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்தி, வகைப்படுத்தி செய்து காரியமாற்றுவீர்கள். விருப்பு, வெறுப்பின்றி அனைவருக்கும் உதவி செய்வீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் சாதனை புரிவீர்கள்.

புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் தேவைகள் எளிதாகப் பூர்த்தியாகும். நீங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானமாக முடியும். உங்கள் மீது அபாண்டபழி சுமத்தியவர்கள் தவறுகளை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பார்கள். தெய்வ பலத்தால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் வெளியூறுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். புதிய செயல்களுக்கு அஸ்திவாரம் போடுவீர்கள். உறவினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். இல்லத்தில் களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கை வந்து சேரும்.

சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு உங்களுக்கு உந்துசக்தியாக அமையும். உங்கள் செயல்கள் இடையூறுகளின்றி சுலபமாக நிறைவேறும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உறுதியின்றி செய்த செயல்களில் ஒரு நிரந்தரப் பிடிப்பு ஏற்பட்டு மளமளவென்று நடக்கத் தொடங்கும். சில அனாவசியச் செயல்களுக்கு கைப்பொருள்களை இழந்த நிலை மாறும். மற்றபடி சகோதர, சகோதரிகளால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்களுக்கு உதவி செய்ய நினைத்து சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். என்றாலும் அந்தப் பிரச்சினைகள் தானாகவே விலகிவிடும். உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும். வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பீர்கள். காலதாமதம் ஏற்பட்டாலும் உங்களின் செயல்கள் வெற்றி பெறும். ஆனால் நண்பர்கள், கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. ஆகையால் புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடவும். உங்களுக்குக் கீழ்வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமுடன் செயல்படவும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமடையாமல் கடமைகளைச் செய்து வரவும். பேச்சில் கண்ணியம் குறையாது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். அதேசமயம் எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். போகப் போக உங்களுக்கு சாதகமற்ற நிலைமைகள் மாறிவிடும்.

பெண்மணிகளுக்கு புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பண வரவுக்கு எந்தக் குறைவும் இருக்காது. பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். மாணவமணிகள் முனைப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளில் பதற்றப்படாமல் ஈடுபடவும். அதேசமயம் உங்கள் முயற்சிகளுக்கு ஆசிரியர்களிடம் நல்ல பாராட்டு கிடைக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியால் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதுக்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.

பூசம்: இந்த குரு பெயர்ச்சியால் ஆர்டர்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறுசிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மனதைரியத்தால் வெற்றி காண்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.

ஆயில்யம்: இந்த பெயர்ச்சியால் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவை உண்டாக்குவார். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

பரிகாரம்: அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும் | சிறப்பு பரிகாரம்: வேப்பிலையை அருகிலிருக்கும் புற்று அம்மன் கோவிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும் | சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீகர்ப்பாயை நம” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும் | அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7 | அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், சுக்கிரன், குரு | அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News