Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 17, 2024

கும்பம் ராசி - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 முழுமையாக

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) 

சனி பகவானை ராசிநாதனாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

நீங்கள் உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடைபவர்கள். கிரகநிலை - தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானம் - தொழில் ஸ்தானம் - விரைய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

கும்பம் ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த குரு பெயர்ச்சியில் செய்தொழிலில் சிறிது பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மன உறுதியுடன் அவற்றை சமாளிப்பீர்கள். உங்களின் குறிக்கோளை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் பெரிய முதலீடுகளைச் செய்ய வழி ஏற்படாது. குடும்பத்தினர் ஓரளவுக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள். அதோடு கூட்டாளிகளும் பக்கபலமாக இருக்க மாட்டார்கள்.

எந்த முக்கிய முடிவையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்கவும். மற்றபடி பொதுக்காரியங்களில் ஈடுபட்டு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். அனுபவஸ்தர்களின் அறிவுரைகளைக் கேட்டு அதற்கேற்றபடி தேவையான மாறுதல்களைச் செய்வீர்கள். அதனால் அனாவசிய எண்ணங்களையும், சிந்தனைகளையும் மனதிலிருந்து அகற்றவும். பழைய தாக்கங்களை மறக்க முயற்சி செய்யுங்கள். மனோபலத்தை அதிகரிக்க அமைதியாகவும் டென்ஷன் இல்லாமலும் இறைவனின் திருநாமங்களை ஜபித்து வாருங்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். முன்கூட்டியே யோசித்து உங்கள் செயல்களை சிறப்பாக முடித்துவிடுவீர்கள். உங்கள் மனதில் உள்ளதை சுருங்கச் சொல்லி சரியாக விளக்கும் ஆற்றல் உண்டாகும். கிணற்றுத் தவளையாக இருந்தவர்கள் வெளியூர், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வார்கள். சமுதாயத்திற்கு ஏதாவதொரு வகையில் சேவை செய்து பெயரும், புகழும் பெறும் யோகம் உண்டாகும். குறைவான உடல் உழைப்புக்குக்கூட நிறைவான வருமானம் கிடைக்கும். இல்லத்தில் குதூகலம் நிறையும். ஆன்மிகம், தத்துவம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும்.

குடும்பத்திலும் வெளியிலும் உங்களின் செல்வாக்கு உயரும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளுடனான உங்கள் தொடர்பு அனுகூலமான திருப்பங்களைக் கொண்டுவந்து சேர்க்கும். அதேநேரம் மனதில் கற்பனை பயங்களும் உண்டாகலாம். அவ்வப்போது எதையோ இழந்துவிட்டது போன்ற மனக் கவலைகளுக்கு ஆளாவீர்கள். மேலும் ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். கடினமான உழைப்புக்கு இடையே சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் காலகட்டத்தில் சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாகவும் பக்கபலமாகவும் நடந்துகொள்வார்கள். மேலும் அலுவலக வேலைகளில் பளு இருக்காது. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு இது லாபகரமான பெயர்ச்சியாக அமைகிறது. பொருட்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாளுவீர்கள். என்றாலும் கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம்.

அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். சிலர் புதிய பதவிகளில் அமர்வீர்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். கை நழுவிப்போன ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். உங்களின் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவமணிகள் அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

அவிட்டம் - 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் செய்த வேலைகளை மற்றவர்கள் செய்ததாகக் கூறி நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கவனம் தேவை. வியாபாரிகள் லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவர். உடனிருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் லாபம் அடைவீர்கள். லாபத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும்படியான விற்பனை இருக்கும். உடனிருப்பவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் திருப்தி உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சதயம்: இந்த குரு பெயர்ச்சியால் எந்த காரியத்திலும் கவனம் தேவை. பெரியவர்களிடம் நற்பெயர் எடுத்து மகிழ்ச்சி காண்பீர்கள். மனம் தெளிவடையும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள்.

பூரட்டாதி - 1, 2, 3 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து சந்தோஷம் காண்பீர்கள். இடம், வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். அதற்கான காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பீர்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று பலனடைவீர்கள். வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்: விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும் | சிறப்பு பரிகாரம்: சனிக்கிழமைதோறும் ஸ்ரீகணபதிக்கு தேங்காய் மாலை சாத்தி வழிபடவும் | சொல்ல வேண்டிய மந்திரம்: 'ஓம் ஸம் சனைச்சராய நம' என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும் | அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6, 9 | அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், சுக்கிரன் | அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News