Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 16, 2024

கன்னி ராசி - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 முழுமையாக

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) 

புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

நீங்கள் புத்திக்கூர்மை கொண்டவர்கள்.கிரகநிலை - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது ராசி ஸ்தானம் - தைரிய ஸ்தானம் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

கன்னி ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: குரு பகவானால் உங்களின் வாக்கு வன்மையில் பிரச்சனை வரலாம். மற்றபடி உங்களின் ஆன்மிக சிந்தனைகள் மெருகேறும். புதிய ஆலயங்களைத் தேடிச் சென்று வழிபடுவீர்கள். குடும்பத்தின் வளர்ச்சியில் உங்களின் பங்களிப்பு பெருகும். உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். அதேநேரம் எவரிடமும் அனாவசிய பேச்சு வேண்டாம். மற்றவர்களின் பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப உங்களின் செயல்பாடுகளை வகுத்துக்கொள்ளவும். புதுப்புது ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். திடீரென்று தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் நிலைமை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் ஏற்படாது. யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலத்தையும், மனவளத்தையும் பெருக்கிக் கொள்வீர்கள்.

செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். போட்டியாளர்கள் பின்வாங்குவார்கள். அரசு வகையில் சில சலுகைகள் தேடி வரும். மனதில் ஏற்பட்ட இனம் புரியாத வேதனைகளும், பயங்களும் முற்றிலும் நீங்கிவிடும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களின் குறைகளைக் கண்டறிந்து தயவுதாட்சண்யமின்றி திருத்துவீர்கள். உங்களின் செயல்களுக்கு நண்பர்கள், கூட்டாளிகளிடம் வரவேற்பு கிடைக்கும். பெரியோரைத் தேடிச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். நேர் வழியில் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். உங்களின் முடிவுகளை பயமின்றி செயல்படுத்துவீர்கள்.

குடும்பத்தினரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். போட்டியாளர்கள் உங்களை ஏமாற்ற முடியாது. உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்று இந்தக் காலகட்டத்தில் பூர்த்தியாகும். உங்களின் தெளிந்த சிந்தனைகளால் பிறருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்குவீர்கள். உங்களைச் சார்ந்தவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பீர்கள். வெளிநாடு விசா குறித்த சந்தேகத்தில் இருந்தவர்களுக்கு ஆச்சரிப்படும் வகையில் விசா கிடைத்துவிடும். காணாமல் போயிருந்த பொருட்கள் மீண்டும் கை வந்து சேரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் இந்த குரு பெயர்ச்சியின் காரணத்தால் ஓரளவுக்கு முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். அதேநேரம் வேலைப் பளு அதிகரிக்கும். எனவே பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளுங்கள். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்ய நேரிடும். வியாபாரிகளுக்கு தொடர்ச்சியான லாபம் கிடைக்கும். அதிக முதலீடு செய்யாமல் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உபரி வருமானத்தை எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பீர்கள். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கட்சித் தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்கள் செயல்களைச் செய்து நற்பெயர் வாங்குவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கும். எனவே வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டிவரும். சக கலைஞர்களின் உதவிகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

பெண்மணிகளின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணம் தடைபட்டவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் திருமணம் நடக்கும். உத்தியோகமும் கிடைக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியப் பிரச்சினைகளில் மவுனம் சாதித்து பிரச்சினைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளவும். மாணவமணிகள் படிப்பில் அலட்சியம் காட்டாமல், திட்டமிட்டபடி படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். மற்றபடி உங்கள் படிப்புக்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த மானியங்கள் கிடைக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.

அஸ்தம்: இந்த பெயர்ச்சியால் திடீர் செலவு உண்டாகலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது உங்களுக்கு மனநிம்மதி ஏற்படுத்தித் தரும். பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கவுரவம் அதிகரிக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். சகவியாபாரிகளுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் வழி கிடைக்கும். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.

சித்திரை - 1, 2 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் வீட்டைவிட்டு வெளியே தங்கநேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்திசாதூர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. உங்கள் சமயோஜித புத்திக் கூர்மையால் திடீரென்று வரும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. ஆனாலும் பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பது அவசியம். எல்லாகாரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சினைகள் தீரும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் | சிறப்பு பரிகாரம்: சர்க்கைரைப் பொங்கல் செய்து புதன் கிழமைகளில் ஏதேனும் ஒரு ஆலயத்தில் விநியோகம் செய்யவும் | சொல்ல வேண்டிய மந்திரம்: 'ஓம் ஸ்ரீசாஸ்தாய நம' என்ற மந்திரத்தை தினமும் 5 முறை சொல்லவும் | அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6, 9 | அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News