Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 16, 2024

விருச்சிகம் ராசி - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 முழுமையாக

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) 

செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

நீங்கள் வாக்கிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். கிரகநிலை - ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது லாப ஸ்தானம் - ராசி ஸ்தானம் - தைரிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

விருச்சிகம் ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் வேலைகளை தன்னடக்கத்துடன் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் நிலையை உயர்த்திக் கொள்வதற்கு ஏதுவான நல்ல காரியங்களைச் செய்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியால் வருமானம் சீராக இருக்கும். வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவீர்கள்.

இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளை முன்கூட்டியே உணர்ந்து அதற்கேற்ப செயல்முறைகளை மாற்றிக்கொள்வீர்கள். இல்லத்தில் தடைபட்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். அதேநேரம் சகோதர, சகோதரி வழியில் சிறிது மனத்தாங்கல் ஏற்படலாம். எனவே விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். அதோடு அனாவசிய வம்பு, வழக்குகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். மற்றபடி உங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் தாமாகவே தேடி வந்து நட்புகொள்வார்கள்.

உங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டவர்கள்கூட உங்களுக்கு உதவி செய்யும் காலகட்டமாக இது அமைகிறது. புத்துணர்ச்சியுடன் செயல்பவீர்கள். கடந்த கால கசப்பான அனுபவங்களிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதார நிலைமை சீரடையும். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு ஆதரவாக இருப்பீர்கள். புதிய சொத்துக்களை வாங்கும்போது வில்லங்கம் ஏற்படாத வகையில் கவனமாக வாங்கவும்.

தொழில் ரீதியாக தேவையான பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். சிலருக்கு அரசு விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். சிலருக்கு புதிய வீட்டுக்கு பெயர்ச்சியாகும் வாய்ப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்கள் வகையில் இருந்த வில்லங்கம் விலகி, சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். பழைய சொத்துக்களும் விற்பனையாகும். இதனால் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மருத்துவச்செலவுகள் ஏற்படாது.

குடும்பத்தார் உங்களுடன் விட்டுக்கொடுத்துப் பழகுவார்கள். உங்கள் தோற்றத்தில் வசீகரம் உண்டாகும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உங்கள் செயல்களை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களின் மூலம் ஓரளவுக்குத்தான் நன்மைகள் கிடைக்கும். மற்றபடி உங்கள் கவுரவத்துக்கு எந்தப் பங்கமும் ஏற்படாது. சிலருக்கு விரும்பிய ஊர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிக்கல்களை சந்திப்பீர்கள். அதனால் சிலருக்கு நஷ்டங்கள் உண்டாகலாம். அதேநேரம் கூட்டாளிகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து நடந்துகொள்வார்கள். இதனால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். மற்றபடி புதிய முதலீடுகளை நன்கு யோசித்த பிறகே செய்யவும். அரசியல்வாதிகளுக்கு தடைகள் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றியடையும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். பல வழிகளிலும் வருமானம் பெருகும். தொண்டர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்துகொண்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம். ரசிகர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சககலைஞர்கள் நட்பு பாராட்டுவார்கள்.

பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த குருப்பெயர்ச்சி. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவர் உங்களை மதித்து நடப்பார். அவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சரளமாகவே இருக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவமணிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். சீரிய முயற்சி செய்தால் மேலும் மதிப்பெண்களை அள்ளலாம். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

விசாகம் 4: இந்த குரு பெயர்ச்சியால் வாழ்வு வளம் பெறும். துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும எல்லா காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்திதெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

அனுஷம்: இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

கேட்டை: இந்த குரு பெயர்ச்சியால் பூமி சம்பந்தமான துறையினருக்கு லாபம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். கவனமாக பேசுவது அவசியம். உங்களின் எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சினைகளை உண்டாக்கலாம்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும். சிறப்பு பரிகாரம்: செவ்வரளி மாலையை அருகிலிருக்கும் செவ்வாய்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும். சொல்ல வேண்டிய மந்திரம்: 'ஓம் ஸ்ரீம் துர்க்காயை நம' என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும் | அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7, 9 | அதிர்ஷ்ட ஹோரைகள்: ஞாயிறு, செவ்வாய், குரு | அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News