Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 16, 2024

மிதுனம் ராசி - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 முழுமையாக

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) 

புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! 

நீங்கள் சாதுவான தோற்றத்தைக் கொண்டவர். 

கிரகநிலை - லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது சுக ஸ்தானம் - ரண ருண ரோக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

மிதுனம் ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: குரு பகவானால் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். செய்தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயர் வாங்குவீர்கள். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு தக்க உதவிகளைச் செய்து அவர்களை உங்களுக்கு உதவியாக வைத்துக்கொள்வீர்கள். சமூகநோக்குடன் உங்களின் காரியங்களைச் செய்வீர்கள். நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

வருமானம் சீராக இருக்கும். செய்தொழில் நன்றாக நடப்பதால் புதிய கடன்கள் வாங்க நேரிடாது. சிலருக்கு வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும் நிலைமை உண்டாகும். பிறரின் பொறாமைகளுக்கும், போட்டிக்கும் ஆளாக நேரிடும் என்பதால் கவனம் தேவை. நீங்கள் தொடுத்திருந்த வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படாது. மற்றபடி வெகுதூரத்திலிருந்து நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். மேலும் அவசியமான விஷயங்களுக்காக திடீரென்று அவசரப் பயணங்களைச் செய்ய நேரிடும்.

குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே உங்களின் செல்வாக்கு உயரும். உங்களின் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும். நினைத்த எண்ணங்கள் கச்சிதமாக செயல்வடிவம் பெறும். கடினமான விஷயங்களிலும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவீர்கள். உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களை இனம்கண்டு விலக்குவீர்கள். உற்றார், உறவினர்கள் உங்கள் பேச்சுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குறைந்த அளவுக்கு முதலீடு செய்து விருப்பமான வாகனங்களை வாங்குவீர்கள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் நீங்கும்.

உங்களின் நேர்மையான போக்கை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களின் சூட்சும அறிவு வேலை செய்யத் தொடங்கும். எதிர்பாராத வகையில் செளபாக்கியங்கள் தேடி வரும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். நெடுநாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த உங்கள் விண்ணப்பம் அரசாங்கத்தால் சாதகமாக பரிசீலிக்கப்படும். இதனால் சலுகைகள் கிடைக்கும். மனதிற்கினிய பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை திட்டமிட்டு முன்கூட்டியே செய்யவும். சில நேரங்களில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். அதேசமயம் பணவரவுக்குத் தடைகள் வராது. எதிர்பார்த்த ஊதிய உயர்வு சரியான நேரத்தில் வந்து சேரும். ஆனாலும் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்றாகவே நடக்கும். கடன்களைப் பெற்று கடையைச் சீரமைப்பீர்கள். புதிய சந்தைகளில் உங்கள் பொருட்கள் விற்பனையாகும்.

அரசியல்வாதிகள் வெற்றிகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படும். ஆகவே உங்கள் திட்டங்களைப் பொறுமையாக செயல்படுத்தவும். அதேநேரத்தில் தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். சில சமயங்களில் உங்கள் கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். எனவே யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்து நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். சககலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சீராக இருக்கும். அதேசமயம் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சூடான வார்த்தைகளைப் பேச வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வீர்கள். அதேநேரம் பெற்றோரின் ஆதரவு குறையும்.

மிருக சீரிஷம் 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியின் மூலம் லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள்.

திருவாதிரை: இந்த குரு பெயர்ச்சியின் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

புனர்பூசம் - 1, 2, 3 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.


பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும் | சிறப்பு பரிகாரம்: துளசியை பறித்து அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு அர்ப்பணித்து வணங்கவும் | சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும் | அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6 | அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், சுக்கிரன் | அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News