மேற்கு வங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு, ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு மூலம் அரசு உதவி பெறும் மற்றும் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் என 24 ஆயிரம் நியமனங்களை ரத்து செய்துள்ளது.
ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, 9 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் குரூப்-சி, குரூப்-டி ஊழியர்களின் நியமனத்தை ரத்து செய்திருப்பது, மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
24,640 காலிப்பணியிடங்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வினை 23 லட்சம் பேர் எழுதி 24 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேட்டில், தொடர்புடைய 24 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அதாவது, நியமன முறை செல்லாது என்று அறிவித்ததன் மூலம், அந்த நியமனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
பள்ளி சேவை ஆணையம் உடனடியாக புதிய தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிடவும், சட்டவிரோதமான நியமிக்கப்பட்டவர்களிடமிருந்து அடுத்த ஆறு வார காலத்துக்குள் அவர்கள் பெற்ற ஊதியத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக இருந்த பாா்த்தா சாட்டா்ஜி, முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையால் தேதி கைது செய்யப்பட்டார். அவரது நெருங்கிய தோழியான நடிகை அா்பிதா முகா்ஜியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
மேற்கு வங்க அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள், இதர ஊழியா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பான வழக்கில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பாா்த்தா சட்டா்ஜி, அா்பிதா முகா்ஜி மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அா்பிதாவுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.49.80 கோடி ரொக்கப் பணம், நகைகள், தங்கக் கட்டிகள், நிலம், கட்டடங்கள், பண்ணைவீடு சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment