Join THAMIZHKADAL WhatsApp Groups
உலகளவில் சுமார் மில்லியன் கணக்கான மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொதுவான செரிமான பிரச்சனை தான் மலச்சிக்கல்.
இந்த மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், அது தினசரி செயல்பாடுகளை ரிலாக்ஸாக செய்யவிடாமல் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும்.
குறிப்பாக கோடையில் இந்த மலச்சிக்கல் பிரச்சனை தலைத்தூக்கும். ஏனெனில் கோடையில் கொளுத்தும் வெயிலால் உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல், மலம் இறுக்கமடையும். இது தவிர நார்ச்சத்து இல்லாத ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடும் போது, இப்பிரச்சனை இன்னும் தீவிரமாகிறது.
இந்த மலச்சிக்கல் பிரச்சனைக்கு என்ன தான் ஏராளமான மருந்துகள் கடைகளில் விற்கப்பட்டு வந்தாலும், இந்த மருத்துகளை பயன்படுத்தி தீர்வு கண்டால், பின் அதுவே பழக்கமாகிவிடும். எனவே மலச்சிக்கல் பிரச்சனைக்கு முடிந்த வரை இயற்கை வழியில் தீர்வு காண்பதே நல்லது. அதற்கு அதிகப்படியான நீரை தினமும் குடிப்பதைத் தவிர, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
அதுவும் ஒருசில விதைகளை ஒருவர் தினமும் உட்கொள்ளும் போது, அதில் உள்ள நார்ச்சத்துடன் ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணத்தைப் பெறலாம். இப்போது எந்த விதைகள் எல்லாம் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது மற்றும் அவற்றை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
ஆளி விதைகள்
ஆளி விதைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த ஆளி விதைகளை தினமும் உட்கொள்ளும் போது, அது இறுக்கமடைந்த மலத்தை மென்மையாக்கி, எளிதில் மலக்குடல் வழியே வெளியேற்ற உதவுகிறது. அதற்கு ஆளி விதைகளை அப்படியே சாப்பிடாமல், அரைத்து பொடி செய்து, தயிர், ஸ்மூத்தி, ஓட்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இதனால் மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம்.
சியா விதைகள்
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவும் மற்றொரு விதை தான் சியா விதைகள். இந்த விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வளமான அளவில் உள்ளன. இந்த விதைகளை உட்கொள்ளும் போது, அவை மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அதற்கு சியா விதைகளை நீரில் ஊற வைத்து, பின் அதை எலுமிச்சை ஜூஸ், சர்பத் போன்றவற்றுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
எள்ளு விதைகள்
எள்ளு விதைகளில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. இந்த எள்ளு விதைகளை தினசரி உணவில் சேர்க்கும் போது, அது குடலியக்கத்தை சீராக்க உதவி புரிந்து, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. கூடுதலாக, எள்ளு விதைகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் லிக்னன் என்னும் கலவைகளை கொண்டுள்ளன. இவை செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இந்த விதைகளை சாலட்டுகள் மற்றும் ஒருசில உணவுகளுடன் சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
சூரிய காந்தி விதைகள்
சூரிய காந்தி விதைகள் சுவையானது மட்டுமின்றி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த விதைகளில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுவதோடு, மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் அளிக்கின்றன. கூடுதலாக இந்த விதைகளில் உள்ள மக்னீசியம், மலமிளக்கியாக செயல்படுவதோ, செரிமான பாதையில் உள்ள தசைகளை ரிலாக்ஸடையவும் செய்கின்றன. எனவே மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படும் போது, சூரிய காந்தி விதைகளை வாங்கி ஸ்நாக்ஸ் நேரத்தை சாப்பிடுங்கள். இதனால் மலச்சிக்கலைத் தடுக்கலாம்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளிலும் நார்ச்சத்து, புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புக்கள், மக்னீசியம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும், குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. அதுவும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை மலத்தை மென்மையாக்கி, எளிதில் வெளியேற்ற உதவி புரிகின்றன. இப்படிப்பட்ட பூசணி விதைகளை சூப், சாலட், தயிர் போன்றவற்றுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள விதைகள் அனைத்துமே மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவித்தாலும், தினமும் போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் உடல் போதுமான நீரேற்றத்துடன் இருந்தால் தான், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் மற்றும் செரிமான செயல்பாடுகளும் சீராக இருக்கும்
No comments:
Post a Comment