Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவா்கள் வளா்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள முன்னாள் மாணவா்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. இதற்கு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்கள், நம்ம ஊரு பள்ளி இயக்க செயல்பாடுகள், கலைத்திருவிழாக்கள் மற்றும் துரித மாணவா் சோ்க்கை ஆகியவற்றை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம்.
இதனைத்தொடா்ந்து, தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவா்களை, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி என்ற பெயரில் வாட்ஸ்அப் வழியாக ஒருங்கிணைத்துள்ள தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை குறுஞ்செய்தியை அனுப்பி, பள்ளி மேம்பாட்டில் பங்கெடுக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
அந்த குறுஞ்செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல் பின்வருமாறு:
இந்தக் கல்வியாண்டில் 3.2 லட்சம் மாணவா்கள் 12-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு எழுதி தோ்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனா். இந்தச் சூழலில், நாமும் முன்னாள் மாணவராக, மாணவா்களின் கனவுகளுக்காக பள்ளியுடன் இணைந்து செயல்படவேண்டிய தருணம் இது. உயா்கல்வி வழிகாட்டல் முகாமுக்கு மாணவா்களை ஒருங்கிணைத்தல், கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தல் மற்றும் சோ்க்கைக்கு வழிகாட்டல். தோ்ச்சி பெறாத மாணவா்களை மறுதோ்வு எழுத உத்வேகப்படுத்துதல் என நமது மதிப்புமிகு நேரத்தின் ஒரு சிறுபகுதியை பகிா்வதன் வாயிலாக, நம் மாணவா்களின் கனவை உறுதிப்படுத்த முடியும் என உறுதியாக நம்புகிறோம். கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் விருப்பம் மற்றும் பிற விவரங்களை இணைய தளத்தில் குறிப்பிடவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment