Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 12, 2024

குரோதி வருடத் தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் - தனுசு

கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து இலக்கை எட்டும் வரை போராடும் தனுசு ராசி அன்பர்களே...

உங்களுக்கு இந்தக் குரோதிவருடம் எப்படி அமையும் என்பதைக் காண்போம்.

ராசிக்கு 7-ம் வீட்டில் இந்த வருடம் பிறப்பதால் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படும். அழகு, ஆரோக்கியம் கூடும். உங்கள் ஆலோசனைகளுக்கு வீட்டிலும் வெளியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் கை கூடிவரும். கணவன் மனைவிக்குள் இருந்து பிணக்குகள் நீங்கும்.

சுக்ரனும், புதனும் ஆண்டு பிறக்கும்போது சாதகமாக இருப்பதால் கனிவாகப் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். கூடுதலாகப் பணி செய்து பொருள் ஈட்டுவீர்கள். உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் உறவினர்கள் மத்தியில் அதிகரிக்கும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு அவர்களுக்கு நெருக்கமாவீர்கள்.

வருடப் பிறப்பு முதல் 30.4.24 வரை குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் மனதின் குழப்பங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி செய்வீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்கும் யோகம் வாய்க்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

1.5.24 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் 6-ல் சென்று மறைவதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். சில நேரங்களில் வெறுப்புணர்வு ஏற்படக்கூடும். சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். திடீர் பயணங்கள் அதிகமாகும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உங்களை விடத் தகுதியில் குறைந்தவர்கள், வயதில் சிறியவர்கள் அல்லது ஒரு காலத்தில் உங்கள் உதவியால் முன்னேறியவர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள்.

சனிபகவான் 3-ம் வீட்டிலேயே இந்தாண்டு முழுக்க சஞ்சாரம் செய்வதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வேலை அமையும். எதிர்த்தவர்களும் நட்பு பாராட்டுவார்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

ராகு 4-ம் இடத்திலும், கேது 10-லும் தொடர்வதால் அரசு அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. அவருக்கு சிறு அறுவை சிகிச்சை வரக்கூடும். உரிய கவனம் தேவை.

அலைச்சலும் இருக்கும். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உணவில் பழங்கள், காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்களால் தொந்தரவுகள் ஏற்படும். சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும்.

23.10.24 முதல் 18.1.25 வரை மற்றும் 7.4.25 முதல் 13.4.25 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால் கணவன் மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். இருவருக்குள்ளும் வீண் சந்தேகத்தை ஏற்படுத்திப் பிரிவை உண்டாக்க சிலர் முயல்வார்கள். சகோதர வகையில் சச்சரவு வரும். சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். பூர்வீகச் சொத்து விஷயத்தில் அதிகம் செலவு செய்துக் கொண்டிருக்க வேண்டாம்.

20.5.24 முதல் 13.6.24 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் பேச்சால் பிரச்னைகளும் வரக்கூடும். மற்றவர்கள் வீட்டு விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் நியாயமாகவும், யதார்த்தமாகவும் பேசினாலும் சிலர் நீங்கள் ஒருசார்பாக பேசுவதாக குறைக் கூறுவார்கள்.

வியாபாரம்: சந்தை நிலவரமும் வாடிக்கையாளர்களின் தேவையும் அறிந்து முதலீடு செய்வது நல்லது. ஏற்றுமதி இறக்குமதி, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக் விஷயத்தில் கவனமாகச் செயல்படுங்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் வரும். ஆவணி மாதத்தில் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள்.


உத்தியோகம்: 1.5.24 முதல் குரு உங்கள் ராசிக்கு 6-ல் அமர்வதால் உத்தியோகத்தில் பொறுப்பு அதிகமாகும். சக ஊழியர்களில் சிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள்தான் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சிலர் பணியிலிருந்து கட்டாய ஓய்வுப் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகும். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். என்றாலும் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News