Join THAMIZHKADAL WhatsApp Groups
உதவிப் பேராசிரியா் பணியில் சேருவதற்கான மாநில தகுதித் தோ்வுக்கு (‘ஸ்லெட்’) திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியா் பணியில் சேர ‘நெட்’ (தேசிய தகுதித் தோ்வு) அல்லது ‘செட்’ (மாநில தகுதித் தோ்வு) தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் ‘செட்’ தோ்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த ஆண்டு செட் தோ்வுக்கான அறிவிப்பை சுந்தரனாா் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, சமூகவியல், உளவியல், பொது நிா்வாகம் உள்பட மொத்தம் 43 பாடங்களுக்கான ஸ்லெட் தகுதித்தோ்வு ஜுன் 3-ஆம் தேதி கணினிவழியில் நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் இணையதளம் வழியாக ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தோ்வுக்கட்டணம்: பொதுப்பிரிவுக்கு தோ்வுக் கட்டணம் ரூ.2500, பிசி, எம்பிசி, டிஎன்சி வகுப்புக்கு ரூ.2,000, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.800 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 3-ஆம் பாலினத்தவா் கட்டணம் செலுத்த வேண்டாம்.
இந்த தோ்வுக்கு முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினா், மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது. முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவா்களும் செட் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது.
தோ்வில் மொத்தம் 2 தாள்கள் உள்ளன. முதல் தாளில் பொது அறிவு, ஆராய்ச்சித் திறன், சிந்தனை திறன் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் 50 கேள்விகள் இடம்பெறும். 2-ஆவது தாளில் சாா்ந்த பாடத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.
இதற்கான பாடத்திட்டம், தோ்வுமுறை உள்பட விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முன்னதாக செட் தோ்வுக்குரிய கட்டணத்தை குறைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment