Join THAMIZHKADAL WhatsApp Groups
திருவள்ளூர்: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் உள்ள 2,256 வாக்குச் சாவடிகளில் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
வாக்குப் பதிவின் போது, தலைமை வாக்குச் சாவடி அலுவலர், வாக்குப் பதிவு அலுவலர்-1, 2 மற்றும் 3 ஆகிய பதவிகளில் பணியாற்ற 9,924 மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுமார் 30% வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு அலுவலர்-2 ஆக பள்ளி, அரசு அலுவலக காவலர்கள், அலுவலக உதவியாளர்கள், சத்துணவு மையங்களின் சமையலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாதவர்கள். வாக்காளர் பெயர் மற்றும் இதர விவரங்களை பதிவேட்டில் எழுதி, வாக்காளர் கையொப்பம் பெறுவதற்கும், வாக்காளர் சீட்டு வழங்குவதற்கும் பொறுப்பானவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தால், வேலை எப்படி நடக்கும்? அதுமட்டுமின்றி, சுமார் 10% வாக்குச் சாவடிகளில், இந்தி மொழி மட்டுமே தெரிந்த, பாதுகாப்பு, ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாக்குப் பதிவு அதிகாரி-2-ஆக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓட்டுப் பதிவு அலுவலர்-2 பதவிக்கு எழுதத் தெரியாத பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் வாக்குப் பதிவின் போது தவறுகள், பிழைகள், காலதாமதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, முறைகேடுகளை தவிர்க்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்கு பதிவு அலுவலர்-2 பதவியில் பட்டம் மற்றும் உயர்கல்வி முடித்த ஆசிரியர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். .
No comments:
Post a Comment