Join THAMIZHKADAL WhatsApp Groups
இளம் வாக்காளர்களுக்கு இணைய வழி வாக்குப்பதிவு வசதி ஏற்படுத்தித் தருமா தேர்தல் ஆணையம்?
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் தேதி முடிவடைகிறது. 18 ஆவது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதனையொட்டி 2024, ஜன.1 ஆம் தேதியை வாக்களிக்க தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறைத் திருத்தம், 2023 அக்டோபர் 27 அன்று வரைவுப் வாக்காளர் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 2023, அக்.27 ஆம் தேதியிலிருந்து 2023, டிச.9 ஆம் தேதிவரை சம்பந்தப்பட்ட முகாம்களிலும் இணைய வழியிலும் பெறப்பட்டன.
மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 13,88,121 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 13,61,888 விண்ணப்பங்கள் (ஆண்கள் 6,17,623; பெண்கள் 7,34,803; மூன்றாம் பாலினத்தவர் 462) ஏற்கப்பட்டு பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பெயர் நீக்கலுக்காக 6,43,307 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 6,02,737 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்வு (3,75,371), இறப்பு (4,77,331) மற்றும் இரட்டைப் பதிவு (97,723) ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன.
அதேபோல், 3,23,997 வாக்காளர்களின் பதிவுகளில் (ஆண்கள் 1,64,487; பெண்கள் 343,1,59; மூன்றாம் பாலினத்தவர் 167) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்படி வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,18,90,348 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,30,96,330; பெண் வாக்காளர்கள் 3,41,85,724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி 13.61 லட்சம் பேர், புதிதாக இளம் வாக்காளர்களாகப் பெயர் சேர்த்துள்ளனர். 6.02 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இவர்களுள் 3.23 லட்சம் வாக்காளர்கள் பல்வேறு திருத்தம் மேற்கொண்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,18, 90,348 ஆக உயர்ந்துள்ளது. இது வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்த எண்ணிக்கையை விட 7 லட்சம் அதிகமாகும். இதில் ஆண் வாக்காளர்கள் 3.03 கோடி பேர். பெண் வாக்காளர்கள் 3.14 கோடி. வெளிநாட்டில் இருக்கும் வாக்காளர்கள் 3,480 பேர். மாற்றுதிறனாளி வாக்காளர்களின் எண்ணிக்கை 4,32,805 பேராக உள்ளது. புதிய வாக்காளர்களாக 5,26,205 பேர் இணைந்துள்ளனர்.
இவர்களுள் ஒரு புள்ளி விவரப்படி, 18-19 வயதினரில் ஆண்கள் 5,85,153 பெண்கள் 5,07,113 மூன்றாம் பாலினத்தவர் 154 பேரும் என மொத்தம் 10,92,420 பேரும் 20 - 29 வயதினரில் ஆண்கள் 56,31,261 பெண்கள் 67,19,313 மூன்றாம் பாலினத்தவர் 2,816 என மொத்தம் 1,29,00,263 பேரும் உள்ளனர். அதாவது, 30 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களாக மொத்தம் 1 கோடியே 21 இலட்சத்து 10 ஆயிரத்து 99 பேர் இருக்கின்றனர். அதாவது மொத்த வாக்காளர்களில் இவர்களின் சதவீதம் 19.42 ஆகும்.
இவர்களில் பெரும்பாலானோர் வெளியூரில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றில் கல்வி பயிலும் உண்டு உறைவிட மாணவர்களாகவும் ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு தேச நலன் காக்கும் எண்ணம் உள்ளுக்குள் இருந்தாலும் தொலைதூர பயணம், தேர்வு, வீண் அலைச்சல், பயணச்சீட்டு கிடைப்பதில் சிக்கல் முதலான காரணங்களால் தம் சொந்த ஊருக்கு வந்து தம் வாக்குரிமையைப் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது வேதனைக்குரியது.
இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் 100 சதவீத வாக்குப்பதிவே நம் இலக்கு என்கிற தொடர் முழக்கம் ஒரு வெற்று முழக்கமாகவே அமையக்கூடும். இவர்களுள் முதல் முறையாக தம் விலைமதிப்பற்ற வாக்கை முறையாகப் பதிவுசெய்து தேசக்கடமை ஆற்றும் பொறுப்பை தேர்தல் நடைமுறைகளில் காணப்படும் பல்வேறு இடர்பாடுகளைக் காரணம் காட்டித் தட்டிக் கழித்து விடும் மனித ஆக்கப் பேரிடர் ஏற்கத்தக்கது அல்ல. தம் தாய்நாட்டின் மீது கொள்ளும் நாட்டுப்பற்றற்ற நிலையை இது போன்ற நிகழ்வுகள் மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்து விடும். இந்த பேராபத்தைக் களைவதில் எல்லோருக்கும் பெரும் பங்குண்டு.
குறிப்பாக, தேர்தல் ஆணையம் இதுகுறித்து நன்கு ஆலோசித்து இவர்களையும் உலக அளவிலான இந்திய ஜனநாயக தேர்தல் திருவிழாவில் கட்டாயம் பங்குகொள்ளச் செய்வது மிக முக்கியம். ''எங்கிருந்தாலும் வாக்களிக்கலாம்' என்கிற புதிய வாக்காளர் தேர்தல் நடைமுறையை காலம் கருதி உடன் பரிந்துரைப்பதும் அவசர அவசியம் கருதி அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும் இன்றியமையாதது.
வாக்களிக்க நேரில் போக முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நடைமுறை அண்மையில் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதுபோன்று, வாக்குச்சாவடிக்கு பல்வேறு நியாயமான காரணங்களால் நேரில் வந்து வாக்குப்பதிவு செய்ய இயலாத மாணவர்கள், அலையக்கூடாத புதிய மற்றும் நிறைமாத கர்ப்பிணிகள், மருத்துவ சிகிச்சை பெறும் உள்நோயாளிகள், வெளியில் வரமுடியாத பல்வேறு தீவிர வெளி நோயாளிகள், நிர்வாக தலைமைப்பதவிகளில் இருப்போர் முதலானோர் பயன்பெறத்தக்க வகையில் புதிய நடைமுறையை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆணையத்திற்கு உள்ளது.
இன்றைய நவீனத் தொழில்நுட்ப உலகில் டிஜிட்டல் இந்தியா என்று பெருமை பேசி வரும் சூழலில் ஆன்ட்ராய்டியன்களாக இருக்கும் இன்றைய இளம் வாக்காளர்களையும் நூறு சதவீதம் வாக்களிக்க வைக்க, இணைய வழி வாக்குப்பதிவு வசதி ஏற்படுத்தித் தர வேண்டியது குறிப்பிடத்தக்கது. அவரவர் தம் வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி அதிலுள்ள வாக்காளர் எண்ணுடன் வாக்காளரின் பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவற்றைப் பதிவிட்டுப் பெறப்படும் ஒருதடவை மட்டும் பயன்படுத்தத்தக்க கடவுச்சொல்லை உபயோகப்படுத்தி அதன்பின் வாக்குப்பதிவு செய்ய வைக்க தக்க ஆவனச் செய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும். தேவைப்படும் நபர்களுக்கு மட்டும் தபால் வழியில் வாக்குச்சீட்டை தற்போது வசிக்கும் முகவரிக்கு அனுப்பி வைத்தும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க முன்முயற்சி மேற்கொள்ளுதல் வேண்டும்.
ஆக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அல்லது பெட்டிகளில் பதிவான வாக்குகளுடன் முறையாகப் பெறப்பட்ட செல்லத்தக்க தபால் வாக்குகள் மற்றும் மிகுந்த பாதுகாப்பு வசதியும் எந்தவொரு முறைகேடும் நிகழ்த்த முடியாத வகையில் மேம்படுத்தப்பட்ட தனிப்பட்ட தரவில் மூன்றாம் தரப்பினர் யாரும் எந்தநிலையிலும் ஊடுருவல் செய்யாதவாறு பதிவான இணையவழி வாக்குகளை இணைத்துக் காணப்பட்ட கூடுதல் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் சூழல் இந்திய மண்ணில் உருவாக்கப் படவேண்டும். இதுபோன்ற வாக்காளர்கள் பயன்பெறத்தக்க ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளால் மட்டுமே வாக்குப்பதிவில் 100% அடைய முடியும்.
ஏனெனில் தேர்தல் கடமை ஆற்றுவதில் படிக்காத, ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மக்கள் ஒருவித திருவிழா கொண்டாட்ட மனநிலையில் பெரும் திரளாக வருகை புரிந்து கால்கடுக்க காத்திருந்தும் தம் பொன்னான வாக்குகளைப் பதிவு செய்து மனநிறைவு கொள்வது தொன்றுதொட்டு வாடிக்கையாக இருந்து வருவது எண்ணத்தக்கது.
படித்த, வேலையில் உள்ள, அதிகார வர்க்க, மேட்டுக்குடி மனநிலையில் வாழும் மனிதர்களிடையே தான் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிப்பதில் ஒருவித சுணக்கமும் அலட்சியமும் அக்கறையின்மையும் மேலோங்கி வளர்ந்து கொண்டு வேதனைக்குரியதாக உள்ளது. இவர்களின் வாக்கை முடிந்தவரை முழுவதும் பதிவு செய்திட தேர்தல் ஆணையம் மிகவும் கவனத்தில் கொள்வது நல்லது. அதை நோக்கி வேகமாக நகர்வது என்பது சாலச் சிறந்ததும் கூட. ஒரு நல்ல தாய் பசியில் வாடும் பிள்ளைக்குத்தான் முதலில் சாப்பாடு வழங்குவாள். தேர்தல் ஆணையமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது நாடு தழுவிய கனவாக உள்ளது. இத்தகைய புதிய இளம் வாக்காளனின் இக்கனவு நனவாகுமா?
எழுத்தாளர் மணி கணேசன்
No comments:
Post a Comment