அடுத்தவர்கள் கையை எதிர்பார்க்காமல் நம் உழைப்பால் முன்னேற வேண்டும் என்ற சிந்தனை உடைய மீன ராசி அன்பர்களே...
உங்களுக்கு இந்தக் குரோதி வருடம் எப்படி அமையும் என்பதைக் காண்போம்.
ராசிக்கு சுக ஸ்தானத்தானமான மிதுனத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் சின்னச் சின்னக் கனவுகளும் நனவாகும். தள்ளிப் போன காரியங்களெல்லாம் சாதகமாக முடிவடையும். வி.ஐ.பிக்கள் நண்பர்களாவார்கள். வீட்டைப் புதுப்பிப்பது அல்லது கூடுதலாக ஒரு தளம் கட்டுவது என்பது குறித்துத் திட்டமிடுவீர்கள். தாயாரின் உடல் நிலை மேம்படும். ஒரு சொத்தை விற்றுவிட்டு மறு சொத்து வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றிப் புதிய வாகனம் வாங்குவீர்கள்.
சுக்ரன் மற்றும் புதன் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்தக் குரோதி வருடம் பிறப்பதால் செயலில் வேகம் கூடும். மனதில் அமைதி உண்டாகும். பேச்சில் கனிவு பிறக்கும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுவீர்கள். கலைஞர்களின் படைப்புகள் வெளியாகிப் பாராட்டுகள் கிடைக்கு. உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் உறவினர், நண்பர்கள் மத்தியில் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் கோபம் குறையும்.
30.4.24 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பணவரவு உண்டு. கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடல் நலம் சீராகும். அழகு, இளமைக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனம், மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.
1.5.24 முதல் வருடம் முடியும் வரை குரு ராசிக்கு 3-ல் அமர்வதால் எதிலும் நிதானம் தேவை. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் பேச வேண்டாம். புதிய முயற்சிகள் தாமதமாகி முடிவடையும். எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். சொத்து வாங்கும் தாய்ப்பத்திரங்களைச் சரிபார்த்து வாங்குவது நல்லது. ஊர் பொதுக்காரியங்களில் நிதானம் தேவை.
சனிபகவான் 12 - ல் விரயச் சனியாகத் தொடர்வதால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களில், உள்விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். எளிதாக முடித்து விடலாம் என நினைத்த காரியங்களைக்கூடப் போராடித் தான் முடிக்க வேண்டி வரும். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து முன்னின்று முடிப்பீர்கள். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்னையில் ஒன்று முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சுவிடும் நேரத்தில் மற்றொரு சிக்கல் தலைத்தூக்கும்.
ராசியிலேயே ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். உடம்பில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறையும். பச்சை கீரை, காய், கனிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது முன்கோபப்படுவீர்கள். சர்க்கரையின் அளவையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் ஈகோவால் சண்டை வெடிக்கும். மனம் விட்டு பேசி முடிகளெடுப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.
1.8.24 முதல் 26.8.24 வரை சுக்ரன் 6-ல் அமர்வதால் அந்தக் காலக்கட்டத்தில் கணவன் மனைவிக்குள் சந்தேகத்தால் சின்ன சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். வாழ்க்கைத்துணைக்கு சிறு அறுவை சிகிச்சையும் வந்து போக வாய்ப்பிருக்கிறது.
வியாபாரம்: பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். இழப்புகளைச் சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சிலர் சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மக்கள் நடமாட்டம் அதிமுள்ள மெயின் ரோட்டிற்கு கடையை மாற்றுவீர்கள். பதிப்பகம், போடிங், லாஜிங், ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார்.
உத்தியோகம்: நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கு மாறும். தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் பாராட்டிப் பேசப்படும். புது பொறுப்புக்கும், பதவிக்கும் உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். பொய் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.மொத்தத்தில் இந்தக் குரோதி ஆண்டு அனைத்திலும் வெற்றி பெற வைப்பதுடன், பணம், பதவியையும் அள்ளித் தருவதாக அமையும்.
No comments:
Post a Comment