Join THAMIZHKADAL WhatsApp Groups
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உலக பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் குரு பகவான் சுவாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சியாக இந்த கோவிலில் நடைபெறும்.
ஆலங்குடி மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குரு பகவானை தரிசிக்க வருவார்கள்.
அந்த வகையில் நாளை மே 1ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
அப்போது மகா தீபாராதனை காண்பிக்கப்படும். மேலும் பரிகார ராசிகள் ரிஷபம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.
ஒருவரது ஜாதகத்தில் வியாழன் இருக்கும் நிலையைப் பொறுத்தே அவரது பெரும்பாலான வேலைகள் முடிவு செய்யப்படுகின்றன. ஜாதகத்தில், வியாழன் வலுவாக இல்லாவிட்டால் அந்த நபரது வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும். குருபலன் இல்லாமல் ஒருவர் எதுவும் செய்ய முடியாது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள். எனவே குரு பலன் ஒருவருக்கு மிகவும் அவசியம்.ஒருவரது ஜாதகத்தில் குரு தோஷம் இருந்தால், குரு பெயர்ச்சி அன்று பரிகாரம் செய்ய வேண்டியவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள கோவிலுக்கு சென்றால் குரு பலம் பெறுவார் என்பது ஐதீகம்.
ஆபத்சகாயேஸ்வரர் கோயில்: திருவாரூரில் இருக்கும் இந்த கோயில் குரு பரிகாரம் செய்ய புனித தலம் ஆகும். இந்த கோயிலில் குரு பகவான் தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். இப்படி காட்சி தரும் குரு பகவானை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
மயூரநாதர் கோயில்: மயிலாடுதுறையில் அமைந்துள்ள இந்த கோயில் காசிக்கு நிகரான புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் தட்சிணாமூர்த்தியாக காட்சி தரும் குரு பகவானை வழிபட்டால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.
வலிதாயநாதர் கோயில்: இந்த கோயில் சென்னை பாடியில் உள்ளது. ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர்கள் குருபெயர்ச்சி அன்று இந்த கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். ஏனெனில், குருபகவானுக்கு பரிகாரம் செய்வதற்கு இந்த கோயில் புனிதமாகக் கருதப்படுகிறது.
வசிஷ்டேஸ்வரர் கோயில்: தஞ்சாவூரில் அமைந்துள்ள இந்த கோயில் குரு பரிகாரம் செய்ய உகந்ததாகக் கருதப்படுகிறது. இந்த கோயிலில் சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சி தரும் நிலையில், அவர்களுக்கு நடுவில் குருபகவான் ராஜகுருவாக காட்சி தந்தார். இப்படி காட்சி தரும் குருபகவானை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
திருச்செந்தூர் முருகன் கோயில்: இந்த கோயில் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் தட்சிணாமூர்த்தியாக காட்சி தரும் குரு பகவானை வணங்கினால் தோஷங்கள் நீங்கி, ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கைலாச நாதர் கோயில்: தூத்துக்குடியில் அமைந்துள்ள இந்த கோயில் நவ கைலாயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோயிலில், கைலாச நாதர் குருவின் அம்சமாக உள்ளதால், இவரை வணங்கினால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில்: சிவகங்கையில் உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும், தட்சிணாமூர்த்தியையும், கோயிலுக்கு பின்புறம் இருக்கும் ஆலமரத்தையும் வழிபட வேண்டும். பின் 12 முறை அந்த மரத்தை சுற்றி வந்தால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி கோயில்: தூத்துக்குடியில் இருக்கும் இந்த கோயிலில் நவ திருப்பதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. குருவாக ஆதிநாத பெருமாள் காட்சி தரும் இந்த கோயிலில் அவரை வணங்கினால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment