ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மட்டுமின்றி அடிப்படை வாழ்க்கைக்கு கூட தண்ணீர் அத்தியாவசியமான ஒன்றாகும். உடல் எடையை குறைக்க தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
உங்கள் உணவு முறைகளில் செய்யும் மாற்றங்கள், உடற்பயிற்சி, 6 முதல் 8 மணி நேரம் வரையிலான தூக்கம் போன்ற சின்ன சின்ன மாற்றங்கள் கூட உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமானதாக மாற்றும்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டிய நீரின் அளவு உங்களின் பாலினம், செயல்பாடுகள், ஆரோக்கிய நிலைகள் மற்றும் உங்களின் எடை போன்ற படிநிலைகளை பொறுத்து அமைகிறது. ஒரு நாளைக்கு 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமானது என்று கூறப்படுகிறது. ஆனால் சில ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
நீர்சத்து அவசியம்
கோடை காலத்தில் தண்ணீரின் அவசியம் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதே சமயம், மொத்த பூமியில் 70 சதவீத அளவுக்கு தண்ணீரால் நிரம்பியது என்றாலும் கூட, அவை அனைத்துமே குடிப்பதற்கு உகந்த நீர் அல்ல. இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்கும் நிலையே காணப்படுகிறது. நமது உடலில் ஏறத்தாழ 70 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் வெளியேற்றுவதற்கு இந்த நீர்ச்சத்து உதவிகரமாக இருக்கிறது.
எவ்வளவு தண்ணீர் குடிக்கனும்
நமது மூட்டுகளில் லூப்ரிகேஷன் அளிக்கவும், உடலில் உணர்வுகளை அதிகரிக்கவும் தண்ணீர் உதவிகரமாக இருக்கிறது. நாளொன்றுக்கு சராசரியாக 8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது உடலுக்கு போதுமானதாக இருக்கும் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது. போதுமான அளவுக்கு நீங்கள் தண்ணீர் அருந்தவில்லை என்றால் உடல் உஷ்ணம் கட்டுப்பாடான அளவில் இருக்காது. அதிக நீர் அருந்துவதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஆனால், பொதுவாக அதிக தாகம் எடுக்கும்போது மட்டுமே நம்மில் பலர் தண்ணீர் அருந்துகிறோம். இதனால் போதுமான அளவுக்கு பலன்கள் கிடைப்பதில்லை. தினசரி 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரையில் தண்ணீர் எடுத்துக் கொள்வது மிக அவசியமாகும்.
ஆற்றலை தக்க வைக்க உதவுகிறது
கோடைக்காலத்தில் உங்கள் உடலில் ஆற்றல் குறைவாக இருப்பதை உணரலாம். தொடர்ச்சியாக நீர்ச்சத்தை இழப்பது நமது மூளையை பாதிக்கும். உதாரணத்திற்கு சோர்வாக உணர்வீர்கள். இத்தகைய சூழலில், ஆற்றலை அதிகரிப்பதற்கான முதன்மையான வழிமுறை தண்ணீர் அருந்துவதே ஆகும்.
ஒருமுக சிந்தனையை அதிகரிக்கும்
நீங்கள் எவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணராவிட்டாலும், உங்கள் மூளை அதை உணரத் தொடங்கிவிடும். உடலில் உள்ள செல்களுக்கு எலெக்ட்ரிக்கல் சிக்னல்களை அனுப்புவதற்கு தண்ணீர் மிக அவசியமானது. நீர்ச்சத்து இல்லை என்றால் தலைச்சுற்றல் உணர்வு ஏற்படும். உங்கள் கண்களும் சோர்வடையும். நீர்ச்சத்து இல்லாத போது உடலின் அத்தியாவசிய இயக்கங்களை தவிர்த்து வேறெந்த கட்டளைகளையும் மூளை பிறப்பிக்காது. இதனால், ஒருமுக சிந்தனைத் திறன் குறையும்.
உடல் எடையை குறைக்கும்
உடல் எடையை குறைக்கும் நோக்கில் குறைவான கலோரிகளை கொண்ட உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளும் அதே சமயத்தில், போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். தண்ணீரில் எந்த கலோரியும் இல்லை. மேலும் உடலில் தேக்கமடைந்திருக்கும் கலோரிக்களை எரிக்க இது உதவியாக இருக்கும். பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது என்பதால் அதிக உணவு சாப்பிடுவது தவிர்க்கப்படும்.
சரும அழகு அதிகரிக்கும்
நமது சருமத்தில் பெருமளவு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சருமத்தில் உள்ள புரதம் மற்றும் நீர்ச்சத்து இணைந்து எலாஸ்டிக் மற்றும் உறுதித்தன்மையை கொடுக்கிறது. ஆகவே, நீர்ச்சத்து குறைவாக இருந்தால் உங்கள் சருமம் வறட்சியாகவும், சுருக்கமாகவும் காணப்படும்.
No comments:
Post a Comment