Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 22, 2024

ஓட்டுப்பதிவின்போது பாதுகாப்பும் இல்லை; பரிவும் இல்லை தேர்தல் கமிஷனுக்கு ஆசிரியர்கள் புகார்

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை; விபத்து, பணிப்பளு காரணமாக 4 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்து தேர்தல் கமிஷனுக்கு ஆசிரியர் சங்கங்கள் புகார் அனுப்பியுள்ளன.

ஏப்.19ல் நடந்த லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவுக்காக 68 ஆயிரத்து 321 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இவற்றில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 233 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலும் ஆசிரியர்களே. தேர்தலுக்கு முன் அவர்களுக்கு 3 கட்டமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ஆனாலும் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் பல்வேறு இன்னல்களை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சந்தித்துள்ளனர். இதற்கு பிரதான காரணம், ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணி, மாவட்டம் வாரியாக தேர்தல் பணிக்கு ஒதுக்கிய நிதி சரிவர செலவிடப்படவில்லை என பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், தமிழக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்க பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:

ஓட்டுப்பதிவுக்கு முன்பே ஓட்டுச்சாவடிகளில் உரிய வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின. தேர்தல் கமிஷன் ஒதுக்கிய ரூ.8.88 கோடி நிதியை குறிப்பிட்டு மதுரை உள்ளிட்ட கலெக்டர்களுக்கு மனுக்கள் அளித்தோம். ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் கண்டுகொள்ளவில்லை.

மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு தேர்தல் பணியில் விலக்கு கேட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கும் கண்டிப்புடன் மறுக்கப்பட்டன.

மன உளைச்சல்

ஓட்டுப் பதிவு நாளில் ஓட்டுச் சாவடிகளில் போதிய கழிப்பறை வசதி இன்றி ஆசிரியைகள் இரவு முழுவதும் கஷ்டப்பட்டனர். குடிநீர் கிடைக்கவில்லை. மூன்று வேளை உணவு கிடைக்காமல் பிஸ்கட், தண்ணீரை குடித்து சமாளித்தனர். ஓட்டுப் பதிவு முடிந்த மறுநாள் அதிகாலை 4:00 மணி வரை ஓட்டுப் பெட்டிகளை எடுக்க வராததால் பூத்துகளிலேயே இருந்து மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.

அதன் பின் வீடுகளுக்கு திரும்பும்போது வாகன வசதி, பாதுகாப்பு கேள்விக்குறியானது.மனஉளைச்சல், உடல்சோர்வுடன் வீடு திரும்பிய தருமபுரி காமலாபுரம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் கணேசன் நெஞ்சு வலியால் இறந்தார். ஆசிரியர் செல்வராஜ், சேலம் ஆத்துார் ஒன்றிய ஆசிரியை சில்வியா கேத்தரின் அனிதா, அவரது கணவர் ஜான் பிரகாஷ் ஆகியோர் சாலை விபத்துகளிலும் சிக்கினர். ஆசிரியை சிகிச்சையில் உள்ளார். மற்ற இருவர் உயிரிழந்தனர்.

நாமக்கல் ராசிபுரம் ஒன்றியம் ஜெயபாலன் தேர்தல் பயிற்சிக்கு சென்றபோது விபத்தில் பலியானார். மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர்.

ஆசிரியர்கள் உயிரிழப்பு, தேர்தல் பணியில் பாதுகாப்பு குறைபாடு, அடிப்படை வசதி பிரச்னைகள் இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

வருங்காலங்களில் ஓட்டுப்பதிவு முடிந்து இரவுக்குப்பின் பின் வீடுகளுக்கு திரும்பும் ஆசிரியைகளுக்கு மாவட்ட நிர்வாகம் வாகன வசதி செய்துதர வேண்டும். உணவு, பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஓட்டுப்பதிவுக்கு முன் ஆசிரியர்களின் பிரச்னைகளை கேட்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News