Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் தவறு செய்யும்போது அவர்களை அடிப்பது உள்ளிட்ட கடும் தண்டனை இதற்கு முன்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த கடும் தண்டனைகளை தடை செய்யும் வகையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விதிகளை வகுத்து கொடுத்துள்ளது.
இந்நிலையில்தான் தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்யும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த காமாட்சி சங்கர் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் வந்தது. அப்போது, குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், பள்ளிகளில் தண்டனை வழங்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வேளையில் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம், ''தண்டனை எந்த விதத்திலும் குழந்தையை நல்வழிப்படுத்தாது. குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வளர அனுமதிப்பதுடன், அவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளை கண்காணிக்கலாமே தவிர அடக்கக் கூடாது., உலகளவில் குழந்தைகள் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அமல்படுத்துவது முக்கியமானது'' என்றார்.
மேலும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை ஒழிக்க வகை செய்யும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அமல்படுத்த தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டார். அதோடு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி விதிகளை மீறி குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால் அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் எனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment