வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 5,990 பணியிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை (TNPSC) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது
ஒரு பணியிடத்திற்கு இரண்டரை பேர் வீதம், சுமார் 14 ஆயிரத்து 500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி.-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் வெளியான குரூப்-1 தேர்வு முடிவுகளின் தரவரிசைப்பட்டியலும் வெளியாகி உள்ளது. 198 பேர் கொண்ட இப்பட்டியலில், 850 மதிப்பெண்களுக்கு 587 புள்ளி 25 மதிப்பெண்கள் பெற்ற பெண் ஒருவர் முதலிடத்தை பிடித்துள்ளார். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 198 பேருக்கும், வரும் 12ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளில் காலியாக உள்ள பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு கடந்தாண்டு (2023) நடைபெற்றது. நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன.
கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தத் தோ்வை 51 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதி இருந்தனர். முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், குரூப்- 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
15:12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 5,990 பணியிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை (TNPSC) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது . தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தேர்வு முடிவுகள் டிசம்பர் 16ஆம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment