Join THAMIZHKADAL WhatsApp Groups
குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு, குரூப்-2 பதவிகளுக்கு மட்டும் அடுத்ததாக நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் முதல்நிலைத் தேர்வு மட்டும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் என்றும், முதன்மைத் தேர்வு 2 பதவிகளுக்கும் தனித்தனியாக நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்படி, குரூப்-2 பதவிக்கான முதன்மைத் தேர்வுக்கு மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும், குரூப்-2ஏ பதவிக்கான முதன்மைத் தேர்வுக்கு புதிய பாடத்திட்டமும் https://www.tnpsc.gov.in/English/syllabus.html என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளப் பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இதேபோல், தேர்வுத் திட்டம் https://www.tnpsc.gov.in/English/scheme.html என்ற தளத்திலும் சென்று பார்க்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது.
குரூப்-2, 2ஏ பதவிக்கான கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வில் தற்கால நிகழ்வுகள், சமுதாயப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள், இந்திய பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள், அறிவியலும் தொழில்நுட்பமும், கலையும் பண்பாடு, பகுத்தறிவு இயக்கங்கள்- திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம், இக்கால தமிழ்மொழி, தமிழ்நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு, இடஒதுக்கீடு அதன் பயன்கள், தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு, பொருள் வேறுபாடு அறிதல், பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம், பிழை நீக்கி எழுதுக, சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, திருக்குறளில் இருந்து கட்டுரை எழுதுதல் போன்றவை எஸ்.எஸ்.எல்.சி. தரத்தில் இடம்பெற்றுள்ளன. இவை 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும். இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்ததாக பொதுப்பாட மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.
குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கான பொதுப் பாடப்பிரிவில் தமிழ்நாட்டை பற்றிய குறிப்புடன் இந்தியாவின் நவீன வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியம், தமிழ்நாட்டின் குறிப்புடன் இந்தியாவில் உள்ள சமூக பிரச்சினைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, தமிழ்நாட்டை பற்றிய குறிப்புடன் இந்தியாவின் அரசியலமைப்பு, அரசியல் மற்றும் ஆட்சி, தமிழ்நாட்டின் குறிப்புடன் இந்தியாவின் புவியியல், சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் பேரிடர் மேலாண்மை, தமிழ்நாட்டின் குறிப்புடன் இந்திய பொருளாதாரம் என்ற அலகுகளின் (யூனிட்) கீழ் பாடத்திட்டம் இடம்பெற்றுள்ளன. இதில் இருந்து 300 மதிப்பெண்ணுக்கு விரித்துரைக்கும் (டெஸ்கிரிப்டிவ்) வகையிலான வினாக்கள் கேட்கப்படும்.
குரூப்-2ஏ பொதுப்பாடத்தை பொறுத்தவரையில், தமிழ்நாட்டின் நவீன வரலாறு, தமிழ் சமூகம்-கலாசாரம் மற்றும் பாரம்பரியம், தமிழ்நாட்டின் குறிப்புடன் மாநிலங்களின் நிர்வாகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, தமிழ்நாடு பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டின் சமூக பிரச்சினைகள், தமிழ்நாட்டின் குறிப்புடன் இந்தியாவின் புவியியல், சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய அலகுகளின் கீழ் பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து 150 மதிப்பெண்ணுக்கும், பொது நுண்ணறிவு, பகுத்தறிவு பிரிவில் 60 மதிப்பெண்ணுக்கும், பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலம் 90 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு கேட்கப்பட உள்ளன. இதில் பொதுப்பாடம் மட்டும் பட்டப்படிப்பு தரத்திலும், மற்றவை எஸ்.எஸ்.எல்.சி. தரத்திலும் கொள்குறி வகை (ஆப்ஜெக்டிவ்) வினாக்களாக இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment