Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் மாணவர்கள் நீட் (NEET), ஜெஇஇ (JEE) தேர்வினை எதிர்கொள்வதற்கு முதுகலை ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் நடத்திய பாடங்களில் இருந்து கேள்விகள் தயார் செய்து, வாரந்தோறும் மாணவர்களுக்கு பயிற்சி தேர்வுகளும் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கான தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற 3 ஆயிரத்து 647 மாணவர்கள், 9 ஆயிரத்து 094 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 730 பேர் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர்.
இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் கடந்த 5 -ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இந்த தேர்வில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட பயிற்சி தேர்வின்போது கேட்கப்பட்ட கேள்விகளில் இருந்து 113 கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இயற்பியல் பாடத்தில் 50க்கு 24 கேள்விகளும், வேதியியல் பாடத்தில் 50க்கு 31 கேள்விகளும், தாவரவியல் பாடத்தில் 50க்கு 32 கேள்விகளும், விலங்கியல் பாடத்தில் 50க்கு 26 கேள்விகள் என 200 கேள்விகளில் 113 கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக தெரிவித்தனர்.
மேலும், நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகளவில் இளங்கலை மருத்துவப்படிப்பில் சேர்வார்கள் எனவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளித்த முதுகலை ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.முன்னதாக, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி முடித்திருந்த மாணவர்களுக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 மணியிலிருந்து மாலை 4:30 மணி வரை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டன.குறிப்பாக இயற்பியல், தாவரவியல் , உயிரியல் ஆகிய பாட ஆசிரியர்கள் முந்தைய நீட் தேர்வின் கேள்வித்தாள்கள் அடிப்படையிலும், எவ்வாறு கேள்விகள் கேட்கப்படுகின்றன, தேர்வை மாணவர்கள் எப்படி அணுக வேண்டும் உள்ளிட்ட பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்தனர்.
மேலும், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று இருந்த நிலையில், கரோனா தொற்றுக்கு பின்னர் ஒவ்வொரு பாடத்திலும் 5 கேள்விகள் கூடுதலாகக் கேட்கப்பட்டு, தற்போது 200 கேள்விகள் கேட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment