Join THAMIZHKADAL WhatsApp Groups
பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்விஇயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும்அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன. அதன்படி பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஜூன் 1-ம் தேதியன்று ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும்.
இதுதவிர ஆசிரியர்கள் மாறுதல்விண்ணப்பங்களை மே 13 முதல்17-ம் தேதி வரை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு, நிர்வாக மாறுதல், அலகுமாறுதல், பணிநிரவல் ஆகியவற்றில் எந்த வகை என்பதை உரிய விவரங்களுடன் பதிவுசெய்ய வேண்டும். மனமொத்த மற்றும் அலகுவிட்டு அலகு மாறுதல் சார்பான விண்ணப்பங்கள், பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்பட வேண்டும்.
உள்மாவட்டத்துக்குள் பணி: அதேபோல் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் உள்மாவட்டத்துக்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்ற பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் நாளில் வருகை புரியாமலோ, தாமதமாக வந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்பட்டால் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment