Monday, June 24, 2024

'நெட்' இருக்கிறது; கம்ப்யூட்டர் இல்லை! அரசு பள்ளிகளில் மாதம் ரூ.1.50 கோடி வீண்


இணையதள இணைப்பு பெற்றிருந்தும், கம்ப்யூட்டர்கள் எப்போது வரும் என, அரசு பள்ளி ஆசிரியர்கள் பல மாதங்களாக காத்திருக்கின்றனர். கம்ப்யூட்டர்கள் வராததால், மாதம், 1,500 ரூபாய் இணையதள கட்டணம் வீணாவதாகவும், அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இணைப்பு கட்டணம்

சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் போன்றவற்றில், ஹைடெக் ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்படுவதாக, பள்ளிக்கல்வித் துறை கடந்த வாரம் அறிவித்தது.

இதன்படி, 3,799 நடுநிலைப் பள்ளிகள், 10,620 தொடக்கப் பள்ளிகள் உட்பட, 20,332 அரசு பள்ளிகளில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் இணையதள பிராட்பேண்ட் இணைப்பு வசதி பெறப்பட்டுள்ளது. இதற்கு மாதம், 1,500 ரூபாய் இணையதள இணைப்பு கட்டணமாக செலுத்த வேண்டும்.

இணையதள இணைப்பு பெற்றாலும், பெரும்பாலான பள்ளிகளுக்கு, அதை பயன்படுத்துவதற்கான கம்ப்யூட்டர்கள் இன்னும் வழங்கப்படவில்லை. சில பள்ளிகளில் பழைய கம்ப்யூட்டர்களையே பயன்படுத்துகின்றனர். சில பள்ளிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வேறு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களின் சொந்த லேப்டாப்கள், கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி ஸ்மார்ட் வகுப்பு நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பள்ளிகளுக்கு நிதிப் பற்றாக்குறை உள்ள நிலையில், கம்ப்யூட்டர் இல்லாத பள்ளிகள், இணையதள இணைப்பை பயன்படுத்தாமலேயே, மாதம், 1,500 ரூபாய் கட்டணமாக செலுத்துகின்றன.

ஆலோசனை

இந்த வகையில், தமிழகம் முழுதும் குறைந்தபட்சம், 10,000 பள்ளிகளில் மாதம், 1,500 ரூபாய் வீதம், மாதம், 1.50 கோடி ரூபாய் இணையதள இணைப்பு கட்டணம் வீணாவதாகவும், இந்த நிதியை வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என, பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News