Join THAMIZHKADAL WhatsApp Groups
நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மறுதேர்வு ஜூன் 23-ஆம் தேதி நடத்தப்படும் என்றும், 30-ஆம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வெழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு அந்தத் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரத்தைத் தெளிவுபடுத்தும் வரை, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக, நீட் தேர்வு குளறுபடியை சுட்டிக்காட்டியும், மறுதேர்வு நடத்த வலியுறுத்தியும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, "நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டு, அந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, என்டிஏ மற்றும் பிகார் மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், தோ்வு மையங்களில் சில தோ்வா்கள் நேரத்தை இழந்ததால் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும், விசாரணைக் குழுவின் அறிக்கையின்படி, அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும், நேரக் குறைபாடால் பாதிக்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும், விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மறுதேர்வு முடிவுகள் 30-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மறுதேர்வுக்கான அறிவிப்பாணையை இன்றே வெளியிட உத்தரவிட்டனர். மேலும், ஜூலையில் மருத்துவ கலந்தாய்வு நடப்பதால் ஜூன் 30-க்குள் முடிவுகளை வெளியிடுவதை உறுதி செய்ய அறிவுறுத்தினர்.
No comments:
Post a Comment