Join THAMIZHKADAL WhatsApp Groups
நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை சார்பில் மத்திய உயர் கல்வித் துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார். அதேவேளையில், 24 லட்சம் மாணவர்களில் 1,600 மாணவர்களுக்கே பிரச்சினை என்றும், புகார்கள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை மேற்கொள்ளும் என்றும அவர் தெரிவித்தார்.
வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை நீட் தேர்வில் பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன. தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட தமிழகத்தில் இருந்து இதற்கு வலுவான குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில், நீட் தேர்வில் எந்த வித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்த மத்திய உயர் கல்வித் துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், அவர் தனது விளக்கத்தில், “தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்
மொத்தம் உள்ள 4,750 தேர்வு மையங்களில் 6 தேர்வு மையங்களில்தான் பிரச்சினை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. 24 லட்சம் மாணவர்களில் 1,600 மாணவர்களுக்கே பிரச்சினை. பிரச்சினைக்குரிய தேர்வு மையங்களின் சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் தேர்வு நேரம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டதை அடுத்தே, மாணவர்களுக்கு தீர்வாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்த பின்னரே தேர்வு முடிவுகளை வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் நடந்த தேர்வில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை. வினாத்தாள் கசிவும் எங்கும் நடைபெறவில்லை. தேர்வு நடைமுறைகள் மிகவும் வெளிப்படையாக நடந்தன. எனினும் புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். உயர்மட்ட குழு விசாரணைக் குழு ஒரு வாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்யும்" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment