Join THAMIZHKADAL WhatsApp Groups
கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கற்றல், கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி கல்லூரி ஆசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் கடந்தாண்டு முதல் வழங்கப்படுகிறது. உயர்கல்வித் துறையில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், சட்டம், வணிகம், மேலாண்மை, அறிவியல் உட்பட பிரிவுகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 25, பாலிடெக்னிக் பிரிவு ஆசிரியர்களுக்கு 10 என மொத்தம் 35 விருதுகள் தரப்படுகின்றன.
தொடர்ந்து நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கான அறிவிப்பை யுஜிசி சமீபத்தில் வெளியிட்டது. அதில், 2024-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஐடிஐ பயிற்றுநர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் ஆகியோர் www.awards.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் செய்த சிறந்த முன்னெடுப்புகள், ஆராய்ச்சிகள் உள்ளிட்ட விவரங்களை தொகுத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைவேந்தர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது.
இதுதவிர விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆசிரியராக முழு நேரமாக பணிபுரிந்திருக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. வயதும் 55-க்கு மேல் இருக்கக்கூடாது. கல்வியாளர்கள் உட்பட 5 பேர் கொண்ட குழு விருதுக்குத் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும். இதில் தேர்வாகும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது, சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அதை குடியரசுத் தலைவர் டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி அளித்து கவுரவிப்பார்.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் 01129581120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.ugc.gov.in/ugc_notices.aspx எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment