Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 6, 2024

ஜுன் 9 குரூப் 4 தேர்வு. தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை வெளியீடு.!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் 6,244 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு, வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, குரூப் 4 எழுத்து தேர்வு வரும் ஜுன் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு எழுதுவோர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தவறும் பட்சத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

தேர்வர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்தை மாற்ற இயலாது. 

தேர்வர்களின் மெய்த்தன்மையை உறுதி செய்யவும், இதர தேர்வு விதிமுறைகளை தேர்வர்களுக்கு விளக்கும் விதமாகவும், தேர்வர்கள் தேர்வு தொடங்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே தேர்வுக் கூடங்களுக்கு வர வேண்டும்.

தேவைப்பட்டால், தேர்வுக்கூடத்தில் காவல்துறையில் உள்ள ஆண், பெண் காவலர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட நபர்களால் தேர்வர்கள் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். கைப்பேசி மற்றும் சில தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு கூடத்திற்கு எடுத்துவரக் கூடாது. தேர்வர்களுடன் வரும் பெற்றோர் மற்றும் பிற நபர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது. 

தேர்வு மையத்தின் அனைத்து நுழைவாயில்களும் தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக மூடப்படும். அதன் பின்னர் வரும் எவரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை தேர்வு தொடங்க திட்டமிடப்பட்ட நேரம் 9.30 மணி எனில், காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வந்து இருக்கையில் அமர்ந்துவிட வேண்டும்.

தேர்வுக் கூடத்தில் அறை கண்காணிப்பாளர், தலைமை கண்காணிப்பாளர், ஆய்வு அலுவலர்கள், அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள் எவரும் அனுமதிச்சீட்டினை ஆய்வுக்காக கேட்கும்போது அவர்களிடம் கட்டாயம் காண்பிக்க வேண்டும். தேர்வர்கள் தங்களது அனுமதிச் சீட்டில் அறைக் கண்காணிப்பாளரின் கையொப்பத்தை கட்டாயம் பெறவேண்டும். தேர்வர் அனுமதிச் சீட்டை தங்களது பாதுகாப்பில் நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வர்கள் தங்களது அனுமதிச்சீட்டை அடுத்தக்கட்ட தேர்வுக்கு தெரிவு செய்யப்படும் நேர்வுகளில் சமர்ப்பிக்க வேண்டும். 

தேர்வு அறையில் மட்டுமின்றி தேர்வு மைய வளாகத்திலும் தேர்வர்கள் கண்டிப்பாக ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். மது அருந்திவிட்டு வருவது, தேர்வுக்கூடத்தில் புகைப்பிடிப்பது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது ஆகிய ஒழுங்கீன செயல்களை செய்ய நேரிட்டால் அவர்களது விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.

தேர்வுக்கூட கண்காணிப்பாளர், முதன்மைக் கண்காணிப்பாளர் ஆய்வுக்குழுவினர் அல்லது தேர்வு எழுதவரும் மற்ற தேர்வர்களுடன் தேர்வு அறையிலோ அல்லது தேர்வுக்கூட வளாகத்திலோ தேர்வு நடைபெறுவதற்கு முன்னரோ, பின்னரோ அல்லது தேர்வு நடைபெறும் போதோ, தவறாக நடக்கும் தேர்வர்களின் விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. மேலும், தேர்வாணையம் தக்கதெனக் கருதும் காலம் வரை தகுதிநீக்கம் செய்யப்படுவர். அத்தேர்வர்கள் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். தேர்வுக்கூடத்திற்கு உள்ளே குடிநீர், தேநீர், காபி, சிற்றுண்டி, குளிர்பானங்கள் போன்றவை அனுமதிக்கப்பட மாட்டாது. உடல்நலக் குறைவுடன் தேர்வு எழுத வரும் தேர்வர்கள் தலைமைக் கண்காணிப்பாளரின் அனுமதி பெற்று அவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் மருந்து உபகரணங்களை கொண்டு வந்து அறை கண்காணிப்பாளரின் மேஜையில் வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு கூடத்திற்குள் அல்லது வெளியே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், தேர்வாணையத்தால் தக்கதென கருதப்படும் காலம் வரையில் தேர்வு எழுதுவதிலிருந்து தேர்வர்கள் விலக்கி வைக்கப்படுவர். தேர்வர்கள் தங்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வரவேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News