Join THAMIZHKADAL WhatsApp Groups
பதவி உயர்வுகளற்ற பொது மாறுதலால் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் கல்விக் கனவு!
2024-2025 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது சுய EMIS ID உள்நுழைவின் மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து மே மாதம் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித் துறையானது கால நீட்டிப்பு செய்து இருந்தது.
அதனடிப்படையில், மே 25, 2024 முடிய தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இடைநிலை ஆசிரியர் 18,920 பேரும், பட்டதாரி ஆசிரியர் 9,295 பேரும், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் 5,814 பேரும், நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் 1,640 பேரும் என மொத்தம் 35,669 விண்ணப்பங்கள் பொது மாறுதல் வேண்டிப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுபோல், பள்ளிக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 25,711 பட்டதாரி ஆசிரியர்களும், 17,296 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், 1,186 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும், 1,452 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 176 உடற்கல்வி இயக்குநர்களும்(நிலை1), 989 இடைநிலை மற்றும் இதர ஆசிரியர்களும் என மொத்தம் 46,810 மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது.
தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களிலிருந்து ஆக மொத்தம் 82,479 விண்ணப்பங்கள் எமிஸ் தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளன. தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் 16,183 பேர் ஒன்றியத்திற்குள்ளும், 6,448 பேர் கல்வி மாவட்டத்திற்குள்ளும், 6,185 பேர் வருவாய் மாவட்டத்திற்குள்ளும், 6,853 பேர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரியுள்ளனர்.
இதேபோல், பள்ளிக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் 27,750 பேர் மாவட்டத்திற்குள்ளும், 19,060 பேர் மாவட்டம் விட்டு மாவட்டம் கோரியும் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களால் கூர்ந்தாய்வு செய்யப்படும் எனவும், அதன்பின்னர், பதவிவாரியாக உரிய முன்னுரிமைப்பட்டியல் உகந்த வகையில் வெளியிடப்பட்டு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும், கலந்தாய்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது எண்ணத்தக்கது.
இந்நிலையில், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
இந்த பொதுமாறுதல் கலந்தாய்வானது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மாநில அளவிலான முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண் 243 இன்படி நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நடந்தேறி வருகின்றன. இந்த அரசாணை குறித்து இருவேறு கருத்துகள் இன்றுவரை இருந்து வருவது நோக்கத்தக்கது.
அதேவேளையில், தொடக்கக்கல்வி வரலாற்றில் கடந்த ஆண்டு பதவி உயர்வுகள் அனைத்திற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் என்று வெளியான நீதிமன்ற ஆணையைக் காரணம் காட்டி எந்தவொரு பதவி உயர்வும் வழங்கப்படாமல் கிடப்பில் போட்டது என்பது வேதனைக்குரியது. குறிப்பாக, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் நிரப்பப்படாமல் இருந்தது என்பது அச்சாணி இல்லாமல் வண்டியை எப்படியோ ஓடவிட்டதற்கு ஒப்பாகும். நடுநிலைப் பள்ளிகளில் காலியாகக் கிடந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களால் எந்தவொரு மாற்று நடவடிக்கையும் போதிய உதவியும் மேற்கொள்ளாமல் தம் மீது விழுந்த கூடுதல் பணிச்சுமை திணிப்பை மிகுந்த கசப்புடன் கட்டாயம் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டது தனித் துயரக்கதை. இதுபோன்ற அதிகாரிகளின் நடவடிக்கைகள் அரசுக்குத் தெரிந்து நடக்கின்றதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் வெளியில் தெரியாமல் ஒரு பெரும் இடைவெளி உருவாகிக் கொண்டே வருவதைக் காலம் தாழ்த்தாமல் அரசு உணருதல் நல்லது. இந்த ஆட்சி எப்படி நாசமாகப் போனால் நமக்கென்ன என்று இருப்பவர்கள் வெறுமனே வாயை மூடிக்கொண்டு மனத்திற்குள் கைகொட்டிக் கொண்டிருப்பார்கள்.
அதேசமயத்தில், இந்த திராவிட மாடல் அரசு நீடித்து நிலைத்து பல்லாண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்து தமிழ்நாட்டைத் தொடர்ந்து முதன்மை மாநிலமாக வைத்திருக்க எடுத்துரைக்கப்படும் கருத்துகளைப் புறம்தள்ளுவதும் அச்சுறுத்துவதும் சரிதானா என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆகாஓகோவென்று வெற்றுப் புகழ்ச்சிக்கு இடையில் பயணிக்கும் பிரமாண்ட டைட்டானிக் கப்பல் கண்ணுக்குப் புலப்படாத பனிப்பாறையில் மோதுவதற்குள் கேப்டன் சுதாரித்துக் கொள்வது இன்றியமையாதது. வற்றிப்போகும் குளத்தை நினைத்து எந்தக் கொக்குகளும் கவலைப்படுவதில்லை. அவை வேறு குளத்தை நாடி ஓடி விடும். இது பொய்யாக போலியாக நடிக்கும் சந்தர்ப்ப வாதிகளுக்கும் பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது.
நடப்புக் கல்வியாண்டில் நீண்டகாலமாகப் பணி நிமித்தம் குடும்பத்தைப் பிரிந்து, தொலைதூரத்தில் பணிபுரியும் ஆசிரியர் பெருமக்கள் நடைபெற உள்ள பொதுமாறுதலில் மனமகிழ்ச்சியுடன் பலனடைய இருப்பது என்பது போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியதே ஆகும். அடிப்படை வசதிகள் நிறைந்த, போக்குவரத்து வசதிகள் மிக்க, குடியிருப்பிற்கு பக்கத்தில் காணப்படும் பள்ளிகளில் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் அனைத்தும் முடிந்தவரை நிரம்பி விடும் என்று நம்பப்படுகிறது.
முன்பெல்லாம் பொது மாறுதல் நடந்து முடிந்த அன்று பிற்பகல் அல்லது மறுநாளே சம்பந்தப்பட்ட பதவிகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வானது முன்பே திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட முன்னுரிமை பட்டியல்படி தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் புதிய பதவியில் ஆனந்தத்துடன் அஃது எவ்வளவு குக்கிராமம் ஆனாலும் கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் பணிபுரிந்த காலம் பொன்னானது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழ். பதவி உயர்வுகள் என்பது கானல் நீர் போல் காட்சியளிக்கிறது. தொட்டதெற்கெல்லாம் நீதிமன்றம்! தொடுப்பதற்கு நீயா? நானா? வழக்குகள்! மனமிருந்தால் மார்க்கமுண்டு நிலையில் இருப்பவர்கள் ஒரு மூன்றாம் மனிதர் போல் தள்ளி நின்று காணும் வாடிக்கையாய் தொடரும் வேடிக்கைகள்! காலத்தில் பதவி உயர்வு கிடைக்கப்பெறாமல் அதற்குரிய பணப்பலன்களை இழந்து அல்லாடும் ஆசிரியர்களின் புலம்பல்கள்! தீராத வெறுப்புகள்! தலைமை இல்லா பள்ளிகள்! தரமான கல்விக் கிடைக்கப் போராடும் பிள்ளைகள்! பள்ளிப் பெருமை பேச முடியாமல் ஆளில்லா வகுப்பறைகளைக் கண்டு தூற்றும் வேறு போக்கிடமற்ற ஏழை, எளிய, அடித்தட்டு, விளிம்பு நிலை பெற்றோர்கள்! அப்பப்பா! நினைத்தாலே கசக்கிறது.
வைக்கோல் கன்றைக் காட்டி பசும்பாலை வேண்டுமானால் கறந்து விட முடியும். ஒரு காபந்து அரசு போன்று ஒரு அதிகாரமும் அற்ற பொறுப்பாசிரியர்களைக் கொண்டும் கூலிக்கு ஆள்பிடித்து மாரடிக்கச் சொல்வதைக் கொண்டும் நல்ல கல்வியைக் குழந்தைகளிடம் திணித்து விடமுடியாது.
உண்மையில் மனசாட்சிப்படி சொல்ல வேண்டுமானால் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஏற்கெனவே பதவி உயர்வு இன்மையால் இருக்கும் காலிப்பணியிடங்களுடன் மாறுதல் காரணமாக உருவாக உள்ள புதிய காலிப்பணியிடங்களால் கல்வி பெருமளவு பாதிக்கப்படக் கூடும். இதை அரசு அனுமதிக்கக் கூடாது. அதனால்தான், பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் அரசியல் அமைப்புக்களும் பதவி உயர்வுகள் இல்லாமல் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது என்று அரசைத் தொடர்ந்து வலியுறுத்தியும் வேண்டுகோள் விடுத்தும் வருகின்றன.
ஏனெனில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பதவி உயர்வுக்கான வழக்கு எப்போது முடிவுக்கு வரும் என்பதை யாரும் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற இளையவர்களும் பெறாத மூத்தோர்களும் தம் உரிமையை நிலைநாட்ட முயன்று கொண்டே இருக்க அதிகம் வாய்ப்புண்டு.
தற்போதைய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றவர்கள் போன்று 1995 இல் இடைநிலை ஆசிரியர்களும் 2003 க்குப் பின்னர் பட்டதாரி ஆசிரியர்களும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும் இதே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தும் சென்னையில் நடைபெற்ற நுண் கற்பித்தல் உள்ளடக்கிய நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்றும் தான் பணி நியமனம் ஆகியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ளத்தக்கது. இவர்கள் தாம் தற்போது புதிய பதவி உயர்வுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குத் தான் வெறுமனே எழுதும் ஆசிரியர் தகுதி எழுத்துத் தேர்வு தேவையென்று கூறி முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
பணி நியமனத்திற்கான ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய எவ்வகைத் தேர்வையும் பதவி உயர்வு தகுதிக்கான தேர்வாகக் கருதுவதை முதலில் கைவிட வேண்டியது அவசர அவசியமாகும். இங்கு யாருக்கும் கொம்பு முளைக்கவில்லை. இதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்களும் இல்லை. பதவி உயர்வுக்கென புதிய தகுதித் தேர்வை வடிவமைப்பதும் நடைமுறைப்படுத்துவதும் இன்றியமையாதது. அதாவது, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற முதன்மைப் பாடம் சார்ந்த தகுதித் தேர்வும் தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற நிர்வாகம் சார்ந்த தகுதித் தேர்வும் தேர்ச்சிப் பெறுவது என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதுகுறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குவது தமிழக அரசின் முழுமுதற் கடமையாகும்.
இன்றைய சூழ்நிலையில் ஏதோவொரு வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வெழுதி பணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களையும் அடுத்தகட்ட பதவி உயர்வுக்குத் தரப்படுத்தவும் உயர்த்தவும் பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டுவருதல் இன்றியமையாதது. மேலும், ஆண்டுதோறும் அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெற மே, டிசம்பர் மாதங்களில் துறைத் தேர்வுகள் நடத்துவது போல் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வுகள் இருமுறை நடத்தப் பெற வேண்டும். தற்போதைய நீதிமன்ற நெருக்கடியைச் சமாளிக்க முதலில் நடப்பு பொது மாறுதல் கலந்தாய்வுடன் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த பதவி உயர்வு கலந்தாய்வையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்தி முடிக்க தகுதிவாய்ந்த முன்னுரிமைப் பட்டியலில் உள்ள மூத்தோருக்கு வாய்ப்பு வழங்கி, இத்தற்காலிக பதவி உயர்வை நிரந்தரமாக்கிக் கொள்ள பதவி உயர்வுக்கான தகுதித் தேர்வுக்கான தேர்ச்சியினைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறைவு செய்வதை அரசு ஏழைக் குழந்தைகளின் கல்வி நலன் கருதி கொள்கை முடிவு எடுப்பது சாலச் சிறந்தது. இல்லாவிடில், குக்கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களால் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இலவச கட்டாய தரமான கல்வி அடித்தட்டு குழந்தைகளுக்குக் கிடைப்பது கேள்விக்குறி ஆகிவிடும். இதற்கு தேவை ஒரு துளி மையும் கொஞ்சம் பெரிய மனமும் இருந்தால் போதும்!
நன்றி
மணி கணேசன்
No comments:
Post a Comment