Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிந்து முடிவுகள் வெளியானது. அதனை தொடர்ந்து மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்வு செய்து 11ம் வகுப்பிற்கான சேர்க்கை நடந்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் திறனை கண்டறியும் வகையிலும் அதனை ஊக்குவிக்கும் வகையிலும் திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தோ்வில் 500 மாணவா்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் போ் வரை தோ்வு செய்யப்படுவா்.இதில் தேர்வாகும் தகுதியானவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என்றபடி இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு முடித்து 2024-25ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். நடப்பாண்டை பொறுத்தவரை கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதற்கடுத்த நாள், அதாவது ஜூன் 11ஆம் தேதி முதல் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஜூன் 26. அதற்குள் மேற்சொன்ன இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த தேர்விற்கான கட்டணம் 50 ரூபாய் மட்டுமே. இதுபற்றி தலைமை ஆசிரியர்கள் உரிய முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பான சுற்றறிக்கையை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா அனுப்பி வைத்துள்ளார். மேலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த தேர்வு தொடர்பான விவரங்களை அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். பள்ளிகள் திறந்ததும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் பார்த்து பயன்பெறுவர். இதில் தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு என்பது அதிகப்படியான மாணவர்களை தேர்வு எழுத வைப்பது தான்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் பட்டப்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். முன்னதாக அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் என்ற பெயரில் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. அதுபோல தான் திறனாய்வு தேர்வு திட்டமும் அடங்கும். ஆனால் இதில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். கிராமப்புற, ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment