Join THAMIZHKADAL WhatsApp Groups
TNPSC குரூப் 4 தேர்வு தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர், ஆய்வக உதவியாளர்,பில் கலெக்டர் உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 7247 தேர்வு மையங்களில் நடந்து முடிந்துள்ளது.6244 காலிப்பணியிடங்களுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்த நிலையில் 15.8 லட்சம் பேர் மட்டுமே எழுத்துத்தேர்வில் பங்கேற்றனர்.
இந்தத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களும் ,பகுதி 1-ல் கட்டாய தமிழ் தகுதித் தேர்வு மற்றும் மதிப்பீட்டுத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாகவும், பகுதி 2-ல் கேட்கப்பட்ட பொது அறிவு மற்றும் திறனறிவு வினாக்கள் சற்றுக் கடினமாகவும், குழப்பும் வகையில் இருந்தாகவும் தெரிவித்திருந்தனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பணிவாய்ப்பைப் பெற தேர்வர்கள் எடுக்க வேண்டிய மதிப்பெண், இம்முறை வினாக்கள் கேட்கப்பட்ட விதம் குறித்தான தேர்வர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் தனியார் போட்டித்தேர்வு பயிற்சியாளர் கற்பகராஜா," சென்ற வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் கேள்விகள் சற்று எளிமையாகவே இருந்தது. ஒரு சில வினாக்கள் தேர்வர்களை குழப்பும் வகையிலும் இருந்தது.பொதுத்தமிழ் மட்டுமல்லாது சிறப்புத் தமிழில் இருந்தும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
முந்தைய தேர்வுகளில் கணிதத்தில் 25 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் இம்முறை 29 கேள்விகள் வரை கேட்கப்பட்டன.தற்போது கேட்கப்படும் வினாக்களை வைத்து பார்க்கும்போது ,பாடத்திட்டத்தைத் தாண்டி அதிகமான தகவல்களை தேர்வர்கள் படித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குரூப் 4 தேர்வு மட்டுமல்லாது , அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் அதிகமான முறை மாதிரித்தேர்வுகளை எழுதிப் பார்க்கும் நபர்களால் மட்டுமே தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பணி வாய்ப்பைப் பெற முடியும்.
தொடர்ந்து மாதிரித் தேர்வுகளை எழுதிப் பழகினால் தான் தேர்வு நேரத்தில் ஏற்படும் சிறு சிறு தவறுகளையும், தேவையற்ற பதற்றத்தையும் தவிர்க்க முடியும். மாதிரித் தேர்வுகள் எழுதி பழகுவதன் மூலம் சில மதிப்பெண்களில் வாய்ப்பைத் தவறவிடுதல் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
தேர்வாணையம் அடிக்கடி பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது ஆண்டு முழுவதும் போட்டித்தேர்வுக்காகத் தயாராகும் போட்டியாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. தொடர்ந்து பாடத்திட்டங்களை மாற்றுவதால் தேர்வர்கள் ஏற்கெனவே படித்ததைத் தாண்டி அதிகப்படியான பாடங்களை படிக்கவேண்டிய அவசியம் உண்டாகிறது.
பழைய பாடப்புத்தகங்கள் மற்றும் புதிய பாடப்புத்தங்கள் இரண்டையும் இன்றைய மாணவர்கள் சேர்த்து படிக்க வேண்டிய நிலை உள்ளதால் இது தேர்வர்களுக்கு கூடுதல் சுமையாக மாறுகிறது. இம்முறை நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 175 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பு உண்டு.
தட்டச்சர் பணி போன்றவற்றுக்கு 160 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானதாக இருக்கும் இப்போதெல்லாம் நகர்ப்புற மாணவர்களைக் காட்டிலும், கிராமப்புற மாணவர்களே அதிகளவு போட்டித்தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு அரசு இனிவரும் காலங்களில் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment