Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 5, 2024

ஜூலை 10-ல் பொறியியல் தரவரிசைப் பட்டியல்; கவுன்சலிங் அட்டவணையும் வெளியாக வாய்ப்பு

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) இன்னும் கல்வி அட்டவணையை வெளியிடாத நிலையில், ஜூலை 10ஆம் தேதி தரவரிசைப் பட்டியலை வெளியிடும் அதே வேளையில் பொறியியல் கவுன்சிலிங் அட்டவணையை வெளியிட தமிழக உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA-2024) செயல்முறை மே 6 அன்று தொடங்கியது, சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை செயல்முறைகளை முடித்துள்ளனர். இதனையடுத்து ஜூன் 6 ஆம் தேதியன்று ரேண்டம் எண்கள் வழங்கப்பட்டன. சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் பதிவேற்றம் ஜூன் 12 அன்று நிறைவடைந்தது. ஜூன் 13 முதல் ஜூன் 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜுலை 10 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்தநிலையில், தரவரிசைப் பட்டியல் வெளியாகும் ஜூலை 10 ஆம் தேதியே, கவுன்சலிங் அட்டவணையை வெளியிட தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை திட்டமிட்டுள்ளது என டி.டி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கவுன்சிலிங் தேதிகள் எப்போதும், நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் ஏ.ஐ.சி.டி.இ கல்வி அட்டவணையின்படி அறிவிக்கப்படும். இருப்பினும், இந்த ஆண்டு, ஏ.ஐ.சி.டி.இ-யிடமிருந்து கல்வி அட்டவணை குறித்து எந்த தகவலும் இல்லை. இதனையடுத்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் ஜூலை 10-ஆம் தேதி கவுன்சிலிங் தேதிகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஜூன் 9-ஆம் தேதி வரை ஏ.ஐ.சி.டி.இ-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை காத்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு கூடுதலாக 20% பேர் சேர்ந்துள்ளதால், மூன்று முறைக்கு பதிலாக நான்கு சுற்று கவுன்சிலிங் நடத்தப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment