Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 25, 2024

அரசு, தனியார் ஐடிஐ-களில் மகளிருக்கு 30% இடஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்


அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மகளிருக்கு 30% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (ஜூலை 24) எழுத்துபூர்வமாக தெரிவித்த மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, "திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய திறன் இயக்கம் பல்வேறு திறன் மேம்பாட்டு மையங்கள், கல்லூரிகள் மற்றும் மையங்கள் மூலம் திறன் பயிற்சி, மறுதிறன் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை மகளிர் உட்பட நாட்டின் அனைத்து சமூக பிரிவினருக்கும் அளித்து வருகிறது.

தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், கைவினைஞர்கள் பயிற்சித் திட்டம் உள்ளிட்டவை வாயிலாக பயிற்சிகள் அளிக்கிறது. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் மகளிரின் பங்கேற்பு அதிகரித்து வருவதையடுத்து, அவர்களுக்கான செலவுத் தொகை அளிக்கப்படுகிறது. அனைத்து அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மகளிருக்கென 19 தேசிய திறன் பயிற்சி நிலையங்களும், 300க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி நிலையங்களும் உள்ளன.

2024-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத் திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்றவர்களில் 36.59 சதவீதம் பேரும், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களில் 44.30 சதவீதம் பேரும் மகளிர். தமிழகத்தில் மொத்தம் 503 ஐடிஐ-கள் உள்ளன; மகளிருக்கென ஒரு தேசிய திறன் பயிற்சி நிலையமும், மகளிருக்கென 10 தொழில் பயிற்சி நிலையங்களும் உள்ளன" என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment