Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 2, 2024

சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கும் உணர்வு, ஆசனவாயில் அரிப்பு... தீர்வுகள் என்ன?

Doctor Vikatan: என் வயது 49. கடந்த வருடம் பித்தபையில் கல் வந்ததால் லேப்ராஸ்கோபி மூலம் பித்தபையை அகற்றி விட்டனர்.

எனக்கு BP மற்றும் சுகர் பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு சிகிச்சை எடுத்து வருகிறேன். எனக்கு உணவு உண்டதும் மலம் கழிக்கும் பிரச்னை உள்ளது. ஒரு நாளைக்கு 6 அல்லது 7 முறை மலம் வருகிறது. தவிர, ஆசனவாய் அருகே அரிப்பும், சிறு சிறு வேர்க்குரு போன்றும் உள்ளது. இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?

-பரமேஸ்வரன், சேலம், விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருத்துவர் விக்ரம்குமார்

பித்தப்பையை அகற்றியபிறகு உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக, கொழுப்புச்சத்து, காரம், மசாலா, எண்ணெய் உள்ள உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு வந்திருப்பது 'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' (Irritable bowel syndrome ) என்ற பிரச்னையின் அறிகுறி போலத் தெரிகிறது.

சித்த மருத்துவத்தில் தயிர்சுண்டி சூரணம் என்றொரு மருந்து இருக்கிறது. இதில் கால் டீஸ்பூன் முதல் அரை டீஸ்பூன் வரை எடுத்து மோரில் கலந்து பகல் வேளைகளில் குடித்துவிடலாம். அதேபோல சித்த மருந்துக் கடைகளில், ஏலாதி மாத்திரை என கேட்டு வாங்குங்கள். தினமும் காலையில் ஒரு மாத்திரையைச் சப்பி சாப்பிடுவது பலன் தரும். எதைச் சாப்பிட்டாலும் உடனே மலம் வந்துவிடுமோ என்ற உளவியல்ரீதியான பயமும் இதற்கொரு காரணம். அந்த எண்ணத்திலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.

ஆசனவாயில் அரிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தப் பகுதியில் சின்ன கட்டியோ, மூலநோய்க்கான அறிகுறியோ தெரிகிறதா என்றும் பாருங்கள். ஒருநாளைக்கு ஆறு, ஏழு முறை மலம் கழித்தாலும் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கிறீர்களா என்று பாருங்கள். வயிற்றுப்போக்கு போல உணர்கிறீர்களா என்றும் கவனியுங்கள். உங்களுடைய இந்தப் பிரச்னைக்கு மோர்தான் மிகச் சிறந்த பானம். கூடவே சீரகம் மற்றும் சோம்பை நீரில் கொதிக்க வைத்து அவ்வப்போது குடித்துக்கொண்டே இருக்கலாம்.

ஆசனவாய்ப் பகுதி பிரச்னைக்கு நீங்கள் 'சிட்ஸ் பாத்' (Sitz Bath) என்ற முறையைப் பின்பற்றலாம். அதாவது அகலமான பிளாஸ்டிக் டப்பில் மிதமான சூடுள்ள நீரை நிரப்பவும். அதில் திரிபலா சூரணம் 2 அல்லது 3 டீஸ்பூன் சேர்த்துக் கலக்கவும். ஆசனவாய் அதில் படும்படி சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு பிறகு ஆசனவாயைச் சுத்தப்படுத்தலாம். இதை தினமும் செய்துவந்தாலும் நல்ல நிவாரணம் தெரியும்.

இது எளிதில் குணப்படுத்தக்கூடிய பிரச்னைதான். இவை எல்லாவற்றையும் செய்தும் குணம் தெரியவில்லை என்றால் மருத்துவரை நேரில் அணுகி, ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment