Tuesday, July 23, 2024

கற்பித்தல், பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

“கற்பித்தல் மற்றும் பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி, தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “நாங்கள் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினோம். எங்கள் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த லேப்டாப்கள் திருடப்பட்டன. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் எங்களை ஓய்வு பெற அனுமதிக்கவி்ல்லை. எங்களை ஓய்வு பெற அனுமதித்து, ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுக்களில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: “ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இத்திட்டங்களை செயல்படுத்துவதில் நீதிமன்றம் குறுக்கே வராது. அதே நேரத்தில் பெரும்பாலான பள்ளிகள் பாதுகாப்பான நிலையில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.தலைமை ஆசிரியர்களுக்கு சில நிர்வாகப் பொறுப்புகள் இருந்தாலும், அவர்களின் முதன்மை கடமை மாணவர்களுக்கு கற்பிப்பது தான். மடிக்கணினி திருட்டு வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர்களை பலிகடா ஆக்குவது நியாயமற்றது.

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை சாதாரண மனிதர்களை போல கல்வித்துறை நடத்துவதை ஏற்க முடியாது. இது கண்டிக்கத்தக்கது. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை கற்பிக்கும் பணி மற்றும் பள்ளி நிர்வாகம் தவிர்த்த பிற பணிகளில் பயன்படுத்தக்கூடாது. மனுதாரர்களை ஓய்வு பெற அனுமதித்து, அவர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News