Tuesday, July 23, 2024

நெட், செட் நடக்காததால் பேராசிரியர் தேர்வு ரத்து

அரசு கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வு, வரும் 4ம் தேதி நடக்கவிருந்த நிலையில், திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 164 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 4,000 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 4ம் தேதி நடக்கவிருந்த தேர்வுக்கு, ஏற்கனவே பலர் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்நிலையில், நிர்வாக காரணங்களால், இந்த தேர்வை தள்ளி வைப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்தது. தேர்வு நடக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

உதவி பேராசிரியர் தேர்வுக்கு, முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அவர்கள், மத்திய அரசு நடத்தும், 'நெட்' அல்லது மாநில அரசு நடத்தும், 'செட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், இந்த ஆண்டு ஜூன் 7, 8ம் தேதிகளில், தமிழக அரசின் சார்பில் நடத்தப்படவிருந்த செட் தேர்வு, தொழில்நுட்ப காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.

அதேபோல், ஜூன் 19ல் நடத்தப்பட்ட, மத்திய அரசின் நெட் தேர்விலும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதால், அந்த தேர்வை யு.ஜி.சி., ரத்து செய்தது.

எனவே, நெட், செட் தேர்வு நடத்தாத நிலையில், தமிழக அரசின் உதவி பேராசிரியர் பதவிக்கான தேர்வு நடத்தினால், சட்டச் சிக்கலாகும் என்பதால், தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News