Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 29, 2024

கடலூர் மாவட்ட பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பு - காரணம் என்ன?

ஆசிரியர்கள் சொல்லித் தருவதை பின்பற்றாத குழந்தைகளும், இயல்பாக கற்கும் திறன் குறைந்த ஒரு சில குழந்தைகளும் காலப்போக்கில் எழுதப் படிக்கத் தெரியாமலேயே, ‘அனைவரும் தேர்ச்சி’ என்ற அடிப்படையில் அடுத்தடுத்த மேல் வகுப்புகளுக்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோரும் தங்கள் குழந்தைகள் படிக்கின்றனரா என்பதை கண்டு கொள்வதில்லை. இவ்வாறாக அடிப்படை கல்வியைக் கூட சரிவர கற்றுக் கொள்ளாத குழந்தைகள், ஆசிரியர்கள் புத்தகத்தை பார்த்து படிக்கச் சொல்லுகின்ற போது, படிக்க இயலாததால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பள்ளிக்கு வருவதை தவிர்த்து விடுகின்றனர். இச்சிக்கல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக இருப்பதாக இங்குள்ள கல்வியாளர்கள் கவலை கொள்கின்றனர்.

ஊரகப் பகுதிகளில் ஒரு சில பெற்றோர் பிழைப்பு தேடி வெளியூர் செல்லும் போது, தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வதால், அவர்களை சரிவர பள்ளிக்கு அனுப்பு வதில்லை. ஒரு சில குழந்தைகள் கைபேசி, தொலைக்காட்சி போன்ற பொழுது போக்கு அம்சங்களில் பங்கேற்க ஏதுவாக ஏதாவது காரணங்களைச் சொல்லி பள்ளிக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர். ஆசிரியர்களின் கண்டிப்புக்கு அஞ்சி பள்ளிக்கு சரிவர செல்லாத குழந்தைகளுக்கு ‘புத்தக வாசிப்பு’ என்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில், பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள், தங்களை ஆசிரியர்கள் எழுதப் படிக்க நிர்பந்திக்கக் கூடாது என்று கருதுகின்றனர். இதனை மீறி ஆசிரியர்கள் புத்தகத்தை பார்த்து வாசிக்க சொன்னாலோ, கேள்வி கேட்டாலோ அல்லது சிறு தேர்வு எழுத சொன்னாலோ பள்ளிக்குச் செல்வதை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர். இவ்வாறாக ஏற்படும் இடை நிற்றலை சரி செய்ய முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.

இங்குள்ள கிராமங்களில், அரசு இலவசமாக வழங்கும் புத்தகங்களை பெரும்பாலான மாணவர்கள் பிரித்துக்கூட பார்ப்பதில்லை என்பதே உண்மை. ஆனால், இதையெல்லாம் தாண்டி அரசு, அரசு சார் பள்ளிகளில் ஆசிரியர்கள் சிரத்தையோடு சொல்லி தந்து, கிராம பகுதிகளில் தேர்ச்சி விகிதத்தை படிப் படியாக உயர்த்தி வருகின்றனர். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் கல்வி கற்பதின் அவசியம் கருதி ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த அவலநிலையில் இருந்து மாணவர்களை மீட்டெடுத்து, இடைநிற்றலை சரி செய்ய இயலும் என்று கவலையுடன் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கடலூர் மாவட்ட கல்லி அலுவலர் (இடை நிலை) சங்கரிடம் பேசிய போது, “மாணவர்கள் இடை நிற்றலை தவிர்ப்பதற்காக அந்தந்த பள்ளித் தலைமையாசியர், பள்ளி மேலாண்மை குழு, உள்ளாட்சி பிரநிதிகளை கொண்ட குழு அமைத்து, பள்ளிக்கு வராத மாணவர்கள் வீடுகளுக்குச் சென்று பேசி, வரவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கோட்ட அளவில் இதற்காக குழு அமைக்கப்பட்டு, இந்த செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாதந்தோறும் இது தொடர்பான கூட்டம் நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இடையில் நின்ற 7 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இதுவே இந்தச் செயல்பாட்டின் நல்ல ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. தொடர்ந்து இவ்விஷயத் தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment