Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 2, 2024

கை, கால்களில் திடீரென ஊசி குத்துவது போன்ற உணர்வா?

சிலருக்கு கை, கால் விரல்களில் ஊசி குத்துவது போல் வலியும், பாதங்களில் எரிச்சலும் ஏற்படும். இது மாதிரியான பிரச்னைகள் இரவு நேரத்தில்தான் அதிகம் தோன்றும்.

இதனால் தூக்கம் தடைப்படும். தூக்கம் சரியாக இல்லாததால் எப்போதும் சோர்வுடன் காணப்படுவார்கள். இப்படி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டாலும் இதுபோல் உண்டாகலாம். அல்லது உடலில் பல விட்டமின்கள் போதுமான அளவு இல்லாவிட்டாலும் இம்மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

இது புற நரம்பியல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நோய் மூளை மற்றும் முதுகுத்தண்டின் வெளிப்புறம் உள்ள நரம்புகளை பாதிக்கும். நியூரான் என்னும் உடலில் உள்ள நரம்பியல் செல்கள் வயர் போல் மூளை, முதுகுத்தண்டு என்று உடல் முழுவதும் பரவி செயல்பட்டு செய்திகளை மூளைக்குக் கொண்டு செல்ல உதவும். தொடுதல், வலி போன்றவற்றை உணரவும், தசைகளை அசைக்கவும், நகர்த்தவும் இதில்தான் கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்த நரம்புகள் பாதிப்படைந்தால் கை கால்களில் ஊசி போல் குத்தல், வலி, குடைச்சல், எரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்படும். முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் இம்மாதிரியான பிரச்னையால் இரவு தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள்.

காலில் ஊசி குத்துவது போன்ற வலியிலிருந்து நிவாரணம் அளிக்க மருந்து மாத்திரைகளை தவிர்த்து சில இயற்கை முறைகளை கையாளலாம். சர்க்கரை நோயுடன் தொடர்புடைய இந்த ஊசி குத்துவது போன்ற உணர்வும், பாதங்களில் எரிச்சல், மரத்துப்போகுதல் போன்ற உணர்வும், பாதங்கள் சில சமயம் சூடாகவும் கூச்சம் ஏற்படுவது போலவும் காணப்படுவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்.

மஞ்சள்: மஞ்சளில் ஆன்டி பாக்டீரியல் மட்டும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் பாதங்களில் ஊசி குத்துவது போன்ற வலியைப் போக்குவதற்கு பயன்படும். தினமும் வெதுவெதுப்பான பாலில் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும். அதேபோல் சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை கலந்து எரியும் பாதங்களில் தடவிக் கொள்ளலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்: ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிதளவு தேன் கலந்து பருக, பாதங்களில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலைப் போக்கும்.

பாகற்காய் இலைகள்: பாகற்காய் இலைகளை அரைத்து அந்த விழுதை பாதங்களில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ, ஊசி குத்துவது போன்ற வலியைப் போக்கும். அதேபோல் பாகற்காய் இலைகளை அரைத்து சூடான நீரில் கலந்து அதில் பாதங்களை வைத்துக் கொண்டு பத்து நிமிடங்கள் இருக்க நல்ல பலன் தெரியும்.

மேற்குறிப்பிட்ட எளிய வகை வைத்தியங்களை பின்பற்றியும் வலி, எரிச்சல் போகவில்லையெனில் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனைகளைப் பெறவும். மருத்துவரின் ஆலோசனைப்படி பிசியோதெரபி, வலி நிவாரண மருந்துகள், மசாஜ் தெரபி, உடற்பயிற்சி என சிகிச்சை முறைகளை மேற்கொள்ள நரம்புகள் சிறப்பாக இயங்க உதவியாக இருக்கும்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment