தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், பள்ளிக்
கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் இயங்கும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பொது பணியிட மாறுதல் கவுன்சலிங் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர் சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நலன் கருதி அரசாணை 243 வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் தாங்கள் விரும்பிய இடங்களுக்கே பணியிடமாறுதல் பெற்று செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசாணையை பெரும்பாலான ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், வெளிப்படைத்தன்மையுடன் காலிப் பணியிடங்கள் வெளியிடப்பட்டு பணியிட மாறுதல் கவுன்சலிங்கை பள்ளிக் கல்வித்துறை நடத்தி வருகிறது.
இதில் நேரடியாகவும், தடையின்றியும் பலன்பெற்ற ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பாராட்டி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடப்பு 2024-25ம்
கல்வி ஆண்டுக்கான மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கான மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான உள் மாவட்ட, வெளி மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 13 தொடங்கி ஜூலை 26 வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் புதிய இயக்குநராக கண்ணப்பன் ஜூலை 1ல் பொறுப்பேற்றவுடன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தொடர்புடைய வழக்கு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் வந்த போதும், அதை மிக சிறப்பாக அணுகி, அவைகளை களைந்து கலந்தாய்வின் மூலம் 343 மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை வழங்கி உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திய பிறகு நடத்தப்பட்ட முதல் முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் 3000க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டத்தில் பணிமாறுதல் கிடைக்க உரிய திட்டமிடல்களை சிறப்பாக செய்து பொது மாறுதல் கலந்தாய்வுகளை நடத்தியுள்ளார்.
இதனால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்ற மூத்த முதுகலை ஆசிரியர்களும், விரும்பியபடி பணி மாறுதல் கிடைக்கப்பெற்ற முதுகலை ஆசிரியர்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், உறுதுணையாக இருந்த இணை இயக்குநர்களுக்கும், நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment