Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 1, 2024

மாணவர்களுக்கு இனி மாதம் ரூ.1000.. ஆகஸ்ட் 9 முதல் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடக்கம்

மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தை வருகிற ஆகஸ்ட் 9-ஆம் நாள் கோவையில் நான் தொடங்கி வைக்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாதி, மதம் பொருளாதாரம். சமுதாயச் சூழல் என்று, இது எதுவுமே ஒருவர் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. இதுதான் என்னுடைய எண்ணம். கல்விதான் உங்களிடமிருந்து யாரும் திருட முடியாத சொத்து, இதைத்தான் நான் தொடர்ந்து மாணவர்களிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன். *படிப்பு படிப்பு இது மட்டும்தான் உங்கள் கவனத்தில் இருக்கவேண்டும். அதற்காகத்தான் எண்ணற்ற திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

முக்கியமாக, இதுவரைக்கும், அரசுப் பள்ளியில் படித்து, உயர்கல்விக்கு வரக்கூடிய மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம். அந்தத் திட்டத்தின்கீழ் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

அடுத்து, இதுபோல மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் "தமிழ்ப்புதல்வன்" திட்டத்தை வருகிற ஆகஸ்ட் 9-ஆம் நாள் கோவையில் நான் தொடங்கி வைக்கப் போகிறேன். படிப்புடன் சேர்த்து பல்வேறு தனித்திறமைகளையும் தமிழ்நாட்டு மாணவர் சமுதாயம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில்தான் 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் அரசு ஏற்படுத்தித் தருகின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேறவேண்டும்.

பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை படைப்புத் திறமை, நிர்வாக ஆற்றல். அறிவியல்பூர்வமான சிந்தனை, புதிய கண்டுபிடிப்பு என மாணவச் சமுதாயம் வளரவேண்டும். பட்டங்களோடு சேர்த்து அனைத்துத் திறமைகளும் கொண்டவர்களாக நீங்கள் வளரவேண்டும்! அண்மையில் டாக்டர் குழுமத்தின் தலைவர் மரியாதைக்குரிய சந்திரசேகர் அவர்கள், ஒரு பேட்டியில் குறிப்பிட்டுக் காட்டினார். உடல்நலத்தைப் பற்றி அக்கறையோடு அவர் பேசியிருக்கிறார்.

மாணவர்கள், இளைஞர்கள் இடையே obesity எனப்படும் உடல் எடை கூடி வருவதாக சொல்லியிருக்கிறார். சாப்பாட்டு பழக்க வழக்கங்கள், துரித உணவுகள்தான் இதற்குக் காரணம் என்று அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்! எனவே உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் படிக்க முடியும்; திறமைகளை வளர்த்துக் கொள்ளமுடியும். அந்த வகையில்தான், மாணவர்களும் இளைஞர்களும் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டு இளைய சமுதாயமானது கல்வியிலும், தனித்திறமைகளிலும், விளையாட்டிலும் உடல் நலத்திலும் சிறந்தவர்களாக வளர்ந்து, மாபெரும் சக்தியாகத் திகழ வேண்டும் என்று கேட்டு, இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைந்து விடை பெறுகிறேன்., என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

திட்ட விளக்கம் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்; பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசு அங்கீகரித்ததாக இருத்தல் வேண்டும் பிற மாநிலங்களில் IIT, NIT, IISER போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் பயன் பெறலாம்.

தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறுவர். வருமான உச்ச வரம்பு உட்பட எந்தப் பாகுபாடும் இல்லை. 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலான குழு, மாநில அளவிலான மேற்பார்வையாளர் குழு அமைத்து அரசாணை வெளியீடு. 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்திற்காக விண்ணப்பிக்க பிரத்யேக தகவல் முகமை (Portal) உருவாக்கம் உயர்கல்வி பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக, மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்

தொலைதூரக்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஊக்கத்தொகைப் பெற இயலாது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயின்று ஐடிஐ படிக்கும் மாணவர்களும் பயன்பெறலாம்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment