Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் விண்ணப்பங்களை உரிய காரணம் தெரிவிக்காமல் நிராகரிக்கும் கல்வித் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, நெல்லை, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனங்களை அங்கீகரிக்க கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் 61 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் இ.மாரீஸ்குமார் வாதிட்டார்.
பின்னர் நீதிபதி இன்று பிறப்பித்த உத்தரவு: அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனங்களை அங்கீகரிக்கக் கோரி கல்வித்துறைக்கு உத்தரவிடக்கோரி இந்த மனுக்கள் தாக்கலாகியுள்ளன. பணி நியமனங்களை அங்கீகரிக்கக் கோரிய விண்ணப்பங்கள் மீது பல மாதங்களாக முடிவெடுக்கப்படாமல் இருப்பதால் பள்ளி நிர்வாகம் அல்லது ஆசிரியர்கள் நீதிமன்றம் வந்துள்ளனர்.
இந்த நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் பள்ளி நிர்வாகம் அனுப்பும் பணி நியமனங்களை அங்கீகரிக்கக் கோரும் விண்ணப்பங்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் ஒரு காரணத்தைக் கூறி விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து, அதை நீதிமன்றம் ரத்து செய்தால், அடுத்து மற்றொரு காரணத்தைச் சொல்லி மீண்டும் நிராகரிக்கின்றனர்.
பள்ளி நிர்வாகங்கள் அனுப்பும் பெரும்பாலான விண்ணப்பங்களை, பள்ளியில் உபரி ஆசிரியர்கள் இருக்கின்றனர், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை, நியமனத்துக்கு முன்கூட்டியே அனுமதி பெறவில்லை, இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது என்ற காரணங்களில் எதாவது ஒரு காரணத்தை கூறி நிராகரிக்கின்றனர் அல்லது திருப்பி அனுப்புகின்றனர். இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும்.
பணி நியமனம், பதவி உயர்வுக்காக பள்ளி நிர்வாகம் எப்போதெல்லாம் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதை அதிகாரிகள் நிராகரித்தோ, திருப்பி அனுப்பியோ உத்தரவிட்டால் அதற்கான அனைத்துக் காரணங்களையும் விரிவாக தெரிவிக்க வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றாத அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்குகளில் மனுதாரர்களின் மனுக்கள் ஏற்கப்படுகின்றன. பள்ளி நிர்வாகங்கள் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனங்களை அங்கீகரிக்கக் கோரிய விண்ணப்பங்கள் மீது 8 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment