Join THAMIZHKADAL WhatsApp Groups
பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று டிஆர்பி தேர்வெழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் பதவிகளில் காலியாகவுள்ள 3,192 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி போட்டித் தேர்வை நடத்தியது. இதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற பிஎட் பட்டதாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் 41,185 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 40,136 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் மே 18 மற்றும் 22-ம் தேதிகளில் வெளியிடப்பட்டன. ஒரு காலியிடத்துக்கு ஒன்றே கால் பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இத்தேர்வெழுதி நல்ல மதிப்பெண் பெற்றும் காலியிடங்கள் குறைவால் பணிவாய்ப்பு பெற முடியாத தேர்வர்கள் சுமார் 100 பேர் நேற்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனை சந்தித்து காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: நாங்கள் டிஆர்பி நடத்திய போட்டித்தேர்வை சிறப்பாக எழுதி தேர்ச்சி அடைந்துள்ளோம். அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், தற்போது 3,192 இடங்கள் மட்டுமே இத்தேர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. காலியிடங்களை அதிகரித்து தற்போதைய தேர்வு மூலம் பணி நியமனம் மேற்கொண்டால் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
எங்களில் பலர் 40 வயதை கடந்தவர்கள். எனவே, காலியிடங்களை அதிகரித்து தற்போதைய தேர்வு வாயிலாகவே பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment