Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?
என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசில் 2004&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இது ஈடு இல்லை என்றாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட சிறந்தது என்ற வகையில் வரவேற்கத்தக்கது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணியில் சேர்ந்த சுமார் 23 லட்சம் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, மத்திய அரசுப் பணியாளர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் பிற படிகளில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்படும். மத்திய அரசும் அதே தொகையை செலுத்தும். மத்திய அரசு ஊழியர் 60 வயதில் ஓய்வு பெறும் போது, அவரது கணக்கில் உள்ள முதிர்வடைந்த தொகையில் 40 விழுக்காட்டையும், 60 வயதுக்கு முன்பாக ஓய்வுபெறுவோர் 80 விழுக்காட்டையும் காப்பீட்டு நிறுவனத்திடம் செலுத்தி ஓய்வூதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த முறையில் எவ்வளவு ஊதியம் வழங்கப் படும்? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது தான் புதிய ஓய்வூதிய முறையின் பெரும் குறையாகும்.
ஆனால், மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி, 25 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெறுவோர் அனைவருக்கும் அவர்கள் கடைசி 12 மாதங்களில் பெற்ற சாராசரி ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஊதியமாக வழங்கப்படும். குறைந்தது பத்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.10,000 உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியர்கள் உயிரிழ்ந்தால், அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது வாழ்விணையருக்கு வழங்கப்படும். அதே நேரத்தில் பணியாளர்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது பழைய ஓய்வூதியத்திற்கு மாற்றாக முடியாது. ஆனால், புதிய ஓய்வூதியத்துடன் ஒப்பிடும் போது சிறந்தத் திட்டம். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது தான் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிவிட்ட நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்? என்பது தான் எனது வினா. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. அதன்பின் 03.08.2017-ஆம் தேதி அமைக்கப் பட்ட டி.எஸ்.ஸ்ரீதர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளித்தது. ஆனால், அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியைக் கூட திமுக அரசு மேற்கொள்ளவில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதியைக் கூட மதிக்காமல், கடந்த 2022&ஆம் ஆண்டு மே 7-ஆம் நாள் சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பி.டி,ஆர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டார். அதன்பிறகு வந்த நிதியமைச்சரோ, தமிழகத்தின் நிதிநிலைமை மேம்பட்ட பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்வோம் என்று கூறி வருகிறார். இது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்றழைக்கலாம் என்பதற்கு ஒப்பானதே.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜாக்டோ&ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் போதிலும் அசைந்து கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது அல்ல. கடந்த இரு ஆண்டுகளில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாலயப் பிரதேசம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு நினைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்த மாதமே செயல்படுத்தலாம். ஆனால், அதை செய்ய திமுக அரசுக்கு மனம் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றால் அடுத்து வரும் மாதங்களில் அரசு ஊழியர்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியாது.
வாழ்நாளில் 30 முதல் 35 ஆண்டுகள் வரை அரசுக்காக பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசு ஊழியர்களின் வாக்குகளை வாங்குவதற்காக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமையும் திமுக அரசுக்கு உண்டு. இந்த இரண்டையும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment