Join THAMIZHKADAL WhatsApp Groups
பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாணவர்களின் வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிந்து கொள்ள உதவும் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
செல்போன் செயலி
பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார். இந்த செல்போன் செயலியில் பெற்றோர், ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகம் என 3 விதமான “லாக்கின்'' கொடுக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 60 ஆயிரம் அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடியே 30 லட்சம் மாணவ-மாணவிகளின் விவரங்கள் இந்த செயலியில் இடம்பெற செய்யப்பட்டு இருக்கிறது.
பெற்றோர் லாக்கினில் மாணவர்களின் வருகைப் பதிவு, வகுப்பு தேர்வு, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வு முடிவுகளை நேரடியாக சென்று (துளிர்கல்வி) பார்த்து தெரிந்து கொள்ளலாம். இனிமேல் மாணவர்கள் பெற்றோரிடம் பொய் சொல்ல முடியாது. மேலும் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை தேர்வு செய்து அதன் விவரங்களையும், சமீபத்தில் அந்த பள்ளியில் நடந்த நிகழ்வுகள், பள்ளி சாதித்த நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.
புகார் தெரிவிக்கலாம்
அதுமட்டுமல்லாமல், பெற்றோர் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினாலும் அதில் தெரிவிக்கலாம். அதன் உண்மைத்தன்மை அறிந்து விரைந்து தீர்வு காணப்பட்டு, அந்த தகவல்களும் பெற்றோருக்கு தெரிவிக்கப்படும். மேலும் பெற்றோர் தங்களுடைய அறிவுப் படைப்புகள், கைவினை படைப்புகளையும் வீடியோக்களாக இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம். அதேபோல், ஆசிரியர்களுக்கான லாக்கினில், ஆசிரியர்கள் தங்களுடைய படைப்புகள், திறன்களை வெளிக்கொணர முடியும். பாடத்திட்டங்களை எளிதாக மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் நடத்துவது எப்படி? என்பது தொடர்பாக வீடியோக்களை பதிவிட்டால், அது சரியான முறையாக இருந்தால், அனைவரும் பார்க்கும் வகையில் பகிரப்பட்டு, அதனை பயன்படுத்தவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலும் ஆசிரியர்கள் பேசி வீடியோக்களை பகிரலாம். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் இந்த வசதி செய்யப்பட்டிருக்கிறது.
விரைவில் அறிமுகம்
அடுத்தபடியாக பெற்றோர்-ஆசிரியர் கழகம் லாக்கினில், அனைத்து பள்ளிகளிலும் உள்ள பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் விவரங்கள், செயல்பாடுகளை தெரிந்துகொள்ளமுடியும்.
பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுடைய விவரங்களும், இதுவரை பள்ளிகளுக்கு அவர்கள் செய்த உதவிகள் குறித்தும் இந்த செயலியில் இடம்பெற செய்யப்பட இருக்கிறது. (கல்விச்செய்தி) மேலும் நன்கொடையாளர்கள் பள்ளிக்கு நிதியுதவி அளிக்க விரும்பினால், அந்த பள்ளியை தொடர்பு கொள்ளும் வகையில் தலைமை ஆசிரியரின் செல்போன் எண், பள்ளி இருக்கும் பகுதிகளை காட்டும் ‘மேப்' ஆகியவையும் உட்புகுத்தப்பட்டு உள்ளன. (துளிர்கல்வி) இதுதவிர முன்னாள் மாணவர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு, தாங்கள் படித்த பள்ளியின் விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். மொத்தத்தில் நவீன அம்சங்களுடன், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், மாணவர்களின் நலனை பெற்றோர் அறிந்துகொள்ளவும், ஆசிரியர்களின் வேலைகளை எளிதாக்கவும் இந்த செயலி மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் முதல்-அமைச்சர் ஒப்புதல் பெறப்பட்டு, அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றும், இந்த செயலி கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment