Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 6, 2024

மாணவர்களுக்குக் கேடு விளைவிக்கும் அரசாணையால் அதிகரிக்கும் ஆளற்ற வகுப்பறைகள்! - எழுத்தாளர் மணி கணேசன்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

மாணவர்களுக்குக் கேடு விளைவிக்கும் அரசாணையால் அதிகரிக்கும் ஆளற்ற வகுப்பறைகள்!

பல் இருப்பவர்கள் பட்டாணி தின்ற கதை போல் ஆகிவிட்டது. தற்போது வரை கூவிக்கூவி நடந்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஒன்றிரண்டு ஆசிரியர்களுக்கு. பதவி உயர்வுகளற்ற பொது மாறுதல் என்பது குக்கிராமங்களில், மலை கிராமங்களில், தீவு போன்ற வசதிகளற்ற ஊர்களில் படிக்கும் ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியே ஆகும்.

சபிக்கப்பட்ட வரமாக விளங்கும் 243 எனும் ஒற்றை அரசாணையினால் ஒட்டுமொத்த வக்கற்ற நிலையில் வேறுவழியின்றி அரசுப் பள்ளிகளில் தஞ்சம் புகுந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. தொடக்கக்கல்வி வரலாற்றில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆசிரியர்களும் எந்தவொரு சேதாரமும் இல்லாமல் கூண்டோடு அதுநாள்வரை தாங்கள் பணிபுரிந்து வந்த பள்ளியையும் அப்பள்ளியை நம்பி வந்த அப்பாவிக் குழந்தைகளையும் அம்போவென்று அநாதையாகக் கைவிட்டு, தமக்கு எல்லா வகையிலும் வசதியான பள்ளிகளுக்குப் பறந்த கதை கொடுமையானது.

நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி அதிகமுள்ள பெருநகரங்களில் உள்ள பள்ளிகளை இந்த பொது மாறுதலில் ஆசிரியர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு மொய்த்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். இதனால் முக்கியமான நகரங்களில் உள்ள முக்கியமான பள்ளிகளில் இருந்த பணி நிறைவு, இறப்பு, விருப்ப ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் அனைத்தும் இப்போது நிரம்பி வழிகின்றன.

அதேவேளையில், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளற்ற குக்கிராமப்புற பள்ளிகளில் உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்பது போல இதுவே தக்க தருணம் என்று பலரும் ஓடிவிட்டனர். இனி தரமான கல்வி மட்டுமல்ல சமத்துவமான கல்வி கிடைப்பதும் இப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு அரிதாகி விடும். இந்த அவலநிலை அடுத்து நிரப்பப்படும் புதிய பணியிடங்கள் மற்றும் கடந்த ஓராண்டாக கானல் நீர் போல் காணப்படும் பதவி உயர்வுகள் ஆகியவற்றால் மட்டுமே போக்கப்படும். பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஏற்பாடாக, கடந்த கல்வியாண்டு போலவே நியமிக்கப்படும் தன்னார்வ தொகுப்பூதிய ஆசிரியர்களால் பள்ளிப் பிள்ளைகளுக்குக் கல்வி கிடைக்கும். நிரந்தர ஆசிரியர்களால் மட்டுமே நல்ல தரமான கல்வி தொடர்ந்து கிடைக்கும் என்பதுதான் உண்மை.

பதவி உயர்வுகளற்ற இந்த அசாதாரண சூழலில் பொது மாறுதல் கலந்தாய்வு என்பதே தேவையற்றது. இதில் விடுபட்டவர்களுக்கும் ஏற்கனவே கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கும் மீண்டும் மற்றுமொரு கலந்தாய்வு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதற்கு ஈடானதாக உள்ளது. மாவட்டத்திற்கு ஐந்து விழுக்காட்டினர் மட்டுமே தம் சொந்த விருப்பத்தின் பேரில் பிற மாவட்டங்களில் பணி நியமனமும் பதவி உயர்வும் பெற்று ஒரு சில அசௌகரியங்களுடன் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுள் ஒன்று அல்லது இரண்டு விழுக்காட்டினர் மட்டுமே இதன் முழுப்பலனை அனுபவித்துள்ளனர். மீதமுள்ளோர் தெரிந்த பேய்களிடமிருந்து தப்பித்து முன்பின் தெரியாத பிசாசுகளிடம் அகப்பட்டு உள்ளனர். அவர்களுள் சிலர் உரிய உகந்த உன்னத இடம் கிடைக்கப்பெறாமல் ஏமாந்து போய் நொந்துள்ளதையும் கூர்ந்து கவனிப்பது நல்லது.

ஆகா! எழுந்தது பார் ஒரு யுகப் புரட்சி என்று வெற்றுக் கூச்சலும் போலியான குதூகலமும் அப்பாவி ஆசிரியர்கள் மத்தியில் பேராசை கிளப்பும் வீணான குழப்பமும் ஏற்படுத்துவதில் ஒரு பயனும் இல்லை. இஃது ஏதோ யாரையோ யாருக்கோ ஓர் உள்நோக்கத்திற்காகக் கைப்பிடித்து, கால்பிடித்துப் பின் காக்காப் பிடிப்பது போலிருக்கிறது.

குண்டடிப்பட்டு, குதிரை கொண்டு ஏவிய குண்டாந்தடி அடிபட்டு, சிறை அகப்பட்டு, குருதி சிந்தி உயிரை விட்டு, உதித்த போதே ஆசிரியர்கள் நலனுக்காகப் போராட்டத்தில் குதித்த, இன்றைய ஆட்சியாளர்களுக்கு அனுசரனையானவர்கள் என்று கடந்த ஆட்சிக் காலத்தில் பணியிலிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டி அடிக்கப்பட்டுப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான, இப்போதும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல் செய்வதறியாமல் திருதிருவென முழித்துக் கொண்டிருக்கும் பழம் பெருமை வாய்ந்த அரை நூற்றாண்டுகளைக் கடக்கும் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களைச் சிதைத்து சீர்குலைத்திடும் கருப்பு அரசாணையாகவே இந்த 243 இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநில முன்னுரிமை என்னும் தேன் தடவிய நஞ்சால் தற்போது முதலில் பாதிக்கப்பட்ட சமூகமாக மாணவ சமுதாயம் ஆட்பட்டுள்ளது வேதனைக்குரியது. இதன் அடிப்படையில் பதவி உயர்வு என்று வரும்போது தான் ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் எத்தகைய கொடும் இன்னல்களுக்கு ஆளாகப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. பள்ளிக் கல்வித்துறையில் இது நடக்கவில்லையா என்று பலர் வினவுவது புரியாமல் இல்லை. பள்ளிக்கல்வியின் கீழ் செயல்படும் உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளோடு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை ஒருபோதும் ஒப்பிட முடியாது. வாகனப் புகை படியாத எளிதில் போக முடியாத எத்தனையோ இருண்டு கிடக்கும் குக்கிராமங்களில் தொடக்கப்பள்ளிகளே சிமிழி வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன என்பது நினைவுகூரத்தக்கது.

பண்டைத் தமிழ்ச் சமூகம் பாகுபடுத்தி வைத்திருக்கும் ஐவகை நிலங்களில் எல்லோரும் தம்மைப் புதிய சூழலுக்குத் தகவமைத்துக் கொண்டு வாழ்வது என்பதும் உழைப்பது என்பதும் அவ்வளவு எளிதான செயலல்ல. இவற்றையெல்லாம் புரிந்து வைத்துக்கொண்டு தான் முன்னோர்கள் படித்த, தகுதிவாய்ந்த அந்தந்த மண்ணின் மைந்தர்களை அந்தந்த பகுதிப் பள்ளிகளில் முடிந்தவரை பணியமர்த்தி வந்துள்ளது எண்ணத்தக்கது. ஒன்றிய முன்னுரிமை என்பது இந்த அடிப்படையில்தான் கொண்டு வரப்பட்டது. சொந்த வட்டார வழக்கில் தம்முடன் மிக அணுக்கமாகவும் இணக்கமாகவும் மொழியளவிலும் கருத்தளவிலும் தொடர்பு கொள்பவர்களைக் கூட மனத்தளவில் பகுதியளவு மட்டுமே தம் இரண்டாம் பெற்றோராக ஆசிரியர்களைக் குழந்தைகள் ஏற்கத் துணிவது அறியத்தக்கது. வளர்ப்பு விலங்குகளிடம் காணப்படும் மனிதர்கள் மீதான பயமற்ற தன்மை இன்றளவும் மனிதர்கள் கொஞ்சி வளர்க்கும் பறவைகளிடத்தில் காண்பது அரிது. அவை மனிதர்களை மனிதர்களாகத் தான் உற்றுநோக்கி வருகின்றன. குழந்தைகளும் அவ்வாறே என்பதை குழந்தை உளவியல் வழி உணரவியலும். மொழி அளவில் வேறுபடுபவர்கள் அனைவரும் அவர்களைப் பொறுத்தவரை வேற்றுக் கிரகவாசிகளாகவே நினைக்கப்படுவர். வேற்று மாவட்ட ஆசிரியர்களின் பேச்சு வழக்குகள் அனைத்தும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளூர புரிந்தவை கேலிப் பொருளாகவும் புரியாதவை வெறுப்பு உணர்ச்சியாகவும் சிறுவர் சிறுமியரிடம் வெளிப்படுவது இயல்பு.

முதலில் ஆசிரியர்கள் தம்மை இத்தகைய சூழலுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்வதென்பது மிகவும் சிக்கலான, சிரமமான காரியமாகும். குறிப்பாக, நுகத்தடி மாந்தர்களாகப் பழக்கப்படுத்தப்பட்ட இந்நாள் மற்றும் எதிர்கால இல்லத்தரசிகள் குடும்பத்தையும் குழந்தைகள் வளர்ப்பையும் பெற்றோர்கள் கவனிப்பையும் சுகமான சும்மாடாகத் தலையில் தூக்கிச் சுமக்கும் பெண் ஆசிரியர்கள் மாவட்டம் கடந்த பதவி உயர்வுகளை எந்த அளவிற்கு வரவேற்று புன்முறுவலுடன் ஏற்கப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில், இப்போதுதான் அதற்கான இக்கட்டான சூழல் நேர்ந்திருக்கிறது.

ஒரு கடற்கரைவாசி திடீரென்று மலைவாசியாகவோ, ஒரு மலைவாசி நொடிப்பொழுதில் சமவெளிவாசியாகவோ, ஒரு சமவெளிவாசி எல்லாவற்றையும் கணப்பொழுதில் இழந்து வறண்ட நிலவாசியாகவோ ஒப்பற்ற ஓர் அரசாணை மூலம் நிர்வாக மாறுதல் மற்றும் பதவி உயர்வு காரணங்களால் எந்த அளவிற்கு இமைக்கும் பொழுதில் உருமாற முடியும் என்று விளங்கிக்கொள்ள முடியவில்லை. இதன் உள் மற்றும் நுண் அரசியலைச் சற்றும் புரிந்துகொள்ள விரும்பாத நுனிப்புல் மேய்ந்து ஆன்ம திருப்தி கொள்பவர்கள் ஒன்றை உணர்வது நல்லது. இந்த அரசாணையால் அனைத்து முட்டுக்கட்டைகளும் அகற்றப்பட்டு விட்டன. இனி அரசின் இரும்புக் கரங்கள் யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உபரிகள் என்றோ உதிரிகள் என்றோ அரசுக்கு எதிரானவர்கள் என்றோ தண்ணீரில்லாத காட்டுக்கு மட்டுமல்ல முன்பின் பழக்கமில்லாத மேட்டுக்கும் நிர்வாகம் சார்பில் தூக்கி எறியலாம். இது நடக்காது என்று இப்போது மார்தட்டிக் கொண்டிருக்கும் குய்யோ முறையோ சாலராக்கள் உறுதிபட சொல்ல முடியுமா என்பது கேள்விக்குறி. இந்தப் புதுச் செருப்பு மிகவும் வித்தியாசமானது. புதிதில் கடிக்காது. போகப்போகத் தான் தம் கோர முட்களைக் காட்டப் போகின்றது.

இதனால் மூத்தோர் இளையோர் ஒப்பீட்டு ஊதிய முரண்பாடு களைதல், பதவி இறக்கம் இல்லாமல் பணியிட மாறுதல் நிகழ்தல், முன்னுரிமை இழக்காதத் தன்மை, விரும்பியவாறு விரும்பும் இடத்திற்கு இடம் பெயர்தல் முதலான நன்மைகள் இல்லாமல் இல்லை. இவையனைத்தும் விதிவிலக்குகள். இதனைப் பொதுமைப்படுத்துதல் ஒருபோதும் இயலாது.

இருக்கின்ற பள்ளியில் இருக்கின்ற பணிகளை முடிக்கவே நேரம் கிடைக்காத நிலையில் தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகளையும் அவற்றின் நிதி மேலாண்மைகளையும் கவனித்துக் கொள்ளும்படி கூடுதல் பொறுப்பை வழங்குவது என்பது பணிச்சுமையேயாகும். மாணவர் பாதுகாப்பை அதிகம் வலியுறுத்தும் இந்தக் காலகட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் குறைந்த தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட இருக்கும் தற்காலிக ஆசிரியர்களின் கவனக்குறைவால் ஏற்படும் நிகழ்வுகளுக்கும் இழப்புகளுக்கும் பொறுப்பு ஏற்பது யார்?

ஒரு நிரந்தர ஆசிரியரை இதுகுறித்து தண்டிக்க ஏராளமான வழிவகைகள் உள்ளன. அவர்களது அத்தனைக் குடுமியும் அரசின் கையில் உள்ளது. வெறும் கல்வித் தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு நிரந்தர ஆசிரியருக்கு கல்வித் துறையால் திட்டமிட்டு வழங்கப்படும் பணியிடைப் பயிற்சிகள் ஏதும் வழங்கிட சாத்தியம் இல்லாத நிலையில் தரமான கல்வி கிடைக்கச் செய்வது என்பது முயற்கொம்பே ஆகும். தலைமையாசிரியரே இல்லாத பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் மட்டும் இருக்கும் பள்ளிகளின் கல்வி பயிலும் பச்சிளம் குழந்தைகளின் நிலைமையை எண்ணிப்பார்க்கவே மிகவும் வேதனையாக உள்ளது. அதற்காக அத்தகையோர் மோசமானவர்கள் என்று வாதிடுவது இங்கு நோக்கமல்ல. அசாதாரண சூழலில் நிகழும் அசாதாரண நிகழ்வுகளுக்கும் பள்ளித் தளவாடங்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பொறுப்பேற்பது யார் என்பதுதான் இங்கு கேள்வி.

650 க்கும் மேற்பட்ட மேனிலைப் பள்ளிகள், 425 க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள், 1900 க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அரசுப் பள்ளிகள் இப்போது தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிக் கொண்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் வழி அறிய முடிகிறது. இதுதவிர, தொடக்கக்கல்வித் துறையில் மட்டும் 1850 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் 4450 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் பல்வேறு காரணங்களால் காலியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பள்ளிகளில் படிக்கும் பத்து, பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளோர், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வில் கலந்து கொள்வோர், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் உள்ள 1 - 5 வகுப்பு குழந்தைகள் நிலை குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இங்குள்ள அனைவருக்கும் உள்ளது.

பதவி உயர்வுகள் வழியும் புதிய பணியிடங்கள் நிரப்புதல் வழியும் அனைத்தும் சரியாகி விடும் என்று பரப்புரை செய்யவும் அச்சமாக இருக்கிறது. ஏனெனில், கடந்த 2014 க்குப் பின்னர் முறையான பணி நியமனம் தோற்றுவிக்கப்படவில்லை. சலித்து சலித்து எடுக்கப்பட்ட உபரி பணியிடங்களைத் தொடர்ந்து பணிநிரவல் செய்து நிரப்பியது போக எஞ்சியிருக்கும் காலிப்பணியிடங்கள் புள்ளிவிவரங்கள் தாம் மேற்சொன்னவை ஆகும். இதில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் ஒன்றும் தப்பவில்லை. கடந்த கல்வியாண்டு முதல் இந்த நொடி வரை பதவி உயர்வுகள் எட்டாக் கனியாகவே இருந்து வருவது வேதனைக்குரியது. தொடர்ந்து நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி கொள்கை முடிவெடுத்து அறிவிக்கும் பல நல்ல வாய்ப்புகள் இருந்தும் ஏனோ நாடு போற்றும் திராவிட மாடல் அரசைப் பற்றி ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித காழ்ப்புணர்ச்சியும் எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும் வகையில் அதிகார வர்க்கம் தவறான வழியில் வழிநடத்தி உரிய காலத்தில் உகந்த தீர்வு எட்டப்படுவதை விரும்பாமல் காலம் கடத்துகிறதோ என்று பலவாறு கருதுவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டுவதோடு அல்லாமல் பலவகையான போராட்டங்களை முன்னின்று நடத்துவதன் வழி அறிய முடிகிறது.

இந்த அரசாணையால் குறுகிய காலத்தில் கலந்தாய்வில் கலந்துகொண்டு பலன் அடைந்தவர்களைக் காட்டிலும் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். குறிப்பாக, மாணவர்கள். அனுமார் வால் போன்று நீண்டு கொண்டே செல்லும் பணி மாறுதல் கலந்தாய்வும் கூடவே தள்ளிக்கொண்டே போகும் பதவி உயர்வுகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த வழக்குகளும் தீர்ப்புகளும் ஒருவழியாக முடிவுக்கு(?) வரும்போது ஆளற்ற வகுப்பறையில் மாணவர்கள் முதல் பருவம் மற்றும் காலாண்டுத் தேர்வுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கொடுமையை என்னவென்பது?

கடந்த இரண்டு கல்வியாண்டாக தமிழகம் முழுவதும் நிரப்பப்படாமல் குவிந்து கிடந்த காலிப்பணியிடங்களுக்கு, குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாகப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் கிடைத்திட்ட அரசாணை 243 அடிப்படையில் நடந்த பொது மாறுதல் கலந்தாய்வை, புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பை மட்டுமே ஒற்றைக் கோரிக்கையாக முன்னிறுத்தியவர்களும் சம வேலைக்கு சம ஊதியம் அடைந்தே தீருவோம் என்று ஒற்றை முழக்கத்தை ஓங்கி ஒலித்தவர்களும் அரசியல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆஹா ஓஹோ என்று ஆர்ப்பரிப்பதைப் பார்க்கவே வேதனையாக உள்ளது. முடிவாக, பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்த கதையாக அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலம் அலங்கோலமாக ஆனதுடன் சிறைப்பட்டுச் சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன... ஆசிரியர் பெருமக்களின் நிகழ்காலக் கனவும் மாணவச் சமூகத்தின் எதிர்கால கனவும்!

எழுத்தாளர் மணி கணேசன்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News