Join THAMIZHKADAL WhatsApp Groups
மதுரையில் பள்ளி ஆண்டாய்வுகளில் அதிகாரிகள் விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியைகள் பாதிக்கும் வகையில் இரவு வரை ஆய்வை நீட்டிக்கக்கூடாது' என கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் மாவட்ட தொடக்க, மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,) ஆண்டாய்வு, வட்டாரக் கல்வி அலுவலர்கள் (பி.இ.ஓ.,) பள்ளி ஆய்வுகளில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாகவும், ஆய்வுக்கு வரும் கல்வி அதிகாரிகளுக்கு சிக்கன், மட்டன் பிரியாணி என விருந்து வைத்து அவர்களை 'சிறப்பாக கவனித்து' அனுப்ப வேண்டும் என எழுதப்படாத விதி பின்பற்றப்படுகிறது. ஆய்வையொட்டி ஆசிரியர்களிடம் வசூல் நடத்தப்படுவதாகவும் ஆசிரியர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.இதன் எதிரொலியாக அனைத்து தொடக்க, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான அவசர ஆய்வுக் கூட்டம் சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: பள்ளி ஆண்டாய்வு, பள்ளி ஆய்வுகளை அதிகாரிகள் உரிய விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும். ஆண்டாய்வின் போது இறைவணக்கம் துவங்கும் முன்பே பள்ளிக்கு சென்று, முடியும் ஆய்வை தொடர வேண்டும். ஆசிரியைகள் பாதிக்கும் வகையில் இரவு வரை நீட்டிக்க கூடாது.
தொடக்க பள்ளிகளில் நடக்கும் ஆய்வுகள் தொடர்பாக அதிக புகார்கள் வருகின்றன. மதுரை, திருமங்கலம் தொடக்க கல்வி டி.இ.ஓ.,க்கள் தங்களுக்கு கீழ் உள்ள பி.இ.ஓ.,க்கள் மேற்கொள்ளும் பள்ளி ஆய்வுகளை கண்காணித்து மாதம் ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் பள்ளி மூலம் உணவு ஏற்பாடு செய்வதை தவிர்த்து வீட்டில் இருந்து கொண்டுவர முயற்சி செய்யுங்கள். அதிகாரிகளின் கீழ் நிலையில் உள்ளவர்களை ஆய்வுக்கு அனுப்ப வேண்டாம் என்றார்.
No comments:
Post a Comment