Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 31, 2024

தமிழக அரசு சம்மதித்தபடி ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்: மத்திய அரசு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
“தமிழக அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதிய பதில் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம், தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி பெறுவதில் சிக்கல் நீடித்துள்ளது.

சமக்ரா சிக்‌ஷா திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27-ம் தேதி எழுதிய கடிதத்துக்கு பதில் அளிக்கும் வகையில், அவருக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், “2023-24-ம் நிதி ஆண்டில் இத்திட்டத்துக்கான ஒதுக்கீட்டின் கீழ் நான்கு தவணைகளாக ரூ.1876.15 கோடி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டுக்கு ரூ.4,305.66 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2020 சிறந்த பலன்களை வழங்கும். தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்த சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

பன்மொழிக் கற்றல் மற்றும் தாய்மொழியில் கல்வி கற்றலை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகவும், இந்தியாவின் பழமையான மொழியாகவும் தமிழ் திகழ்வது பெருமைக்குரிய விஷயம். தமிழகத்துக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான கலாச்சார சங்கமத்தைக் கொண்டாடுவதற்காக கல்வி அமைச்சகத்தால் காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், தமிழ் மொழியைக் கற்பதற்கு வசதியாக ஒரு பிரத்யேக தமிழ் அலைவரிசை, 2024 ஜூலை 29 அன்று தொடங்கப்பட்டது.

பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு தொடக்கத்தில் ஒப்புக்கொண்டது. ஆனால், இதுவரை அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைத் தமிழகம் ஏற்றுக்கொள்வது முக்கியம். கூட்டு முயற்சிகள் மூலம், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் கல்வி முறையை உருவாக்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழக அரசு ஏற்கெனவே முன்வந்தபடி, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் தர்மேந்திரப் பிரதான் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி என்ன? தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக்‌ஷா) இந்த நிதியை பெற மத்திய அரசின் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.

இதற்கிடையே மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் இதுவரை இணையவில்லை. அதேநேரம், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு உட்பட சில கோரிக்கைகளை தமிழகம் முன்வைத்தது. ஆனால், அதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதால் இந்த திட்டத்தில் தமிழகம் சேரவில்லை. இதனால் கடந்த கல்வியாண்டில் (2023-24) 4-வது தவணை நிதியுதவியும், நடப்பு கல்வியாண்டில் (2024-25) முதல் தவணை நிதியையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

இதனால் மாநில அரசின் பங்களிப்பை கொண்டு தற்போது திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், நீண்ட காலத்துக்கு இதை கொண்டு சமாளிக்க முடியாது. எனவே பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் பாதிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மானியத்தை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதவிர பாமக, காங்கிரஸ் மற்றும் கல்வியாளர்கள், ஆசிரியர்சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் நிதியை விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அன்பில் மகேஸ் சொல்வது என்ன? புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்குவோம் என மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சமீபத்தில் தெரிவித்தார். மேலும், ‘மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படாததால் 15,000 ஆசிரியர்களின் ஊதியம் கூட நிறுத்தப்படக் கூடிய நிலை ஏற்படும்’ என்றார். அதேவேளையில், “தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News