Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாததால் மத்திய அரசு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சகத்திடம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச செல்லும் பொழுது அவர்களிடம் பேச மறுக்கிறார்கள்.
பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி வழங்க முடியும் என மத்திய அரசு நிர்பந்தம் செய்கிறது. நடைமுறையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பணியாற்றி வரும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு 60 விழுக்காடு ஊதியத்தை மத்திய அரசும், 40 விழுக்காடு ஊதியத்தை மாநில அரசு வழங்கி வருகிறது.
தற்போது முழு தொகையையும் மாநில அரசு ஏற்று வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாட்டில் சிறப்பு ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்கள், மாணவர்கள் வட்டார வள மைய ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் ஊதியம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகையும் வழங்க முடியாத நிலையும் ஏற்படும். அதே போல கலை திருவிழாக்களையும் நடத்த முடியாத சூழல் ஏற்படும்.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் இத்தகைய ஊதியத்தை நம்பி பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பாதுகாக்கும் விதத்தில் உடனடியாக மத்திய அரசு அந்த தொகையை விடுவிக்க வேண்டும். இதனால் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படும். அதே போல ஓய்வூதியம் வாங்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்படும். சரண்டர் தொகையையும் அரசால் வழங்க முடியாது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் தமிழ்நாடு அரசின் முன்பு வைக்கும் பொழுது, அவர்கள் மத்திய அரசிடம் இருந்து வழங்க வேண்டிய நிதி வழங்கப்படாமல் உள்ளது. அதனால் எந்த திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்று பதில் அளிக்கிறார்கள். எங்களுடைய கோரிக்கைகளும் இதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், இல்லாவிட்டால் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
No comments:
Post a Comment